×
Saravana Stores

காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

சென்னை: வங்கக்கடலில் தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

25.11.2024: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

26.11.2024: நாளை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்காலில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

27.11.2024: நாளை மறுநாள் கடலூர், மயிலாடுதுறைக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. நாளை மறுநாள் விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28.11.2024: நவ.28-ல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.28-ல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

29.11.2024: 29-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

30.11.2024: நவ.30-ல் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! appeared first on Dinakaran.

Tags : DELTA ,Chennai ,Bangka Sea ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டெல்டாவில் விடிய விடிய மழை: 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின