இந்த ஆதாரத்தை கொண்டே கர்நாடகத்தில் கோலார், ஆந்திராவில் சித்தூர், தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தின் விவசாயத்துக்கான தண்ணீர் தேவையும், குடிநீர் தேவையும் நிறைவேறி வந்தது. இந்த பாலாற்றின் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையில் 1892ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தப்படி பாலாற்றின் கீழ்படுகையில் உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இன்றி பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதோ, தண்ணீர் தேக்குவதோ, கால்வாய் வெட்டுவதோ, நீரை திசை திருப்புவதோ கூடாது என்று உள்ளது. ஆனால், கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே மூன்று பெரிய அணைகளும், ஆந்திரப்பகுதியில் தமிழக எல்லை வரை சிறிதும், பெரிதுமான 47 தடுப்பணைகளும் கட்டி முடிக்கப்பட்டன. அண்டை மாநிலங்களின் இத்தகைய போக்குகளால் தமிழகத்தில் வறண்ட பாலைவனமாக பாலாறு மாறியது. ஆனாலும் அதன் அடிமடியில் வைத்திருந்த நீராதாரம் வேலூர் உட்பட 7 மாவட்ட மக்களின் வாழ்க்கை சுழற்சிக்கு ஆதாரமாக விளங்கி வந்தது. இந்த நிலை சுதந்திரத்திற்கு பின்பான 20 ஆண்டுகளுக்கு மட்டுமே என்பது வேதனையான ஒன்று.
காரணம், பாலாற்றின் கரைகளில் பெருகிய தோல் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் தொடர்ந்து வெளியேற்றி வந்த ரசாயன கழிவுகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுகளும் பாலாற்றின் நிலத்தடி நீராதாரத்தை விஷமாக்கும் பணியை கச்சிதமாக செய்து வந்தன. அதேபோல் பாலாற்றில் நடந்து வந்த தொடர் மணல் கொள்ளையும் பாலாற்றை பாலைவனமாக்கி, கழிவுநீர் ஓடும் ஆறாக மாறியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் பருவமழை சீசனில் பெய்யும் மழைநீர் ஏரிகளுக்கு திருப்பிவிடப்பட்டது போக, எஞ்சிய நீர் கழிவுநீரோடு கலந்து கடலை சென்று சேர்ந்து வந்தது. இப்படி, சில பருவமழை சீசன்களில் 40 ஆயிரம் அடிக்கும் மேல் தண்ணீர் ஓடும் நேரங்களில் ஏறத்தாழ 150 டிஎம்சி முதல் 350 டிஎம்சி தண்ணீர் வரை பாலாற்றின் உபரிநீர் வாலாஜா தடுப்பணையை தாண்டி கடலை சென்று சேர்ந்தது. இவ்வாறு கடந்த 1991ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, 250 டிஎம்சி தண்ணீரும், 1996ம் ஆண்டு 90 டிஎம்சி தண்ணீரும், 2020ம் ஆண்டு 90 டிஎம்சி தண்ணீரும், 2021ம் ஆண்டு 350 முதல் 450 டிஎம்சி வரையான தண்ணீரும் கடலுக்கு சென்று வீணானதாக பாலாறு பாதுகாப்பு அமைப்பினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.இதனால் பாலாற்றில் பருவமழை சீசனில் பெய்யும் அபரிமிதமான மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்து வருகிறது.
இவ்வாறு பாலாற்றின் குறுக்கே குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய அளவிலான தடுப்பணைகளும், அதன் உபநதிகள் பாலாற்றில் சங்கமிக்கும் இடங்களில் பெரிய அளவிலான தடுப்பணைகளும் கட்டப்பட வேண்டும். அதேபோல் பருவமழை சீசனில் பாலாற்று நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களின் மட்டத்தை விட்டு கீழே மணல் கொள்ளையால் கீழே சென்ற பாலாற்றின் மட்டத்தை உயர்த்தும் வகையில் அங்கெல்லாம் உரிய திட்டமிடல் மூலம் பாலாற்று நீர் முழுமையாக கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு செல்லும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதனால் மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு, பாலாற்றிலும், அதை நம்பியுள்ள விவசாய கிணறுகளிலும், நீர்நிலைகளிலும் நீராதாரம் மேம்படும் என்றும் நீர்மேலாண்மைத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பாலாற்றின் குறுக்கே காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கத்தில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் வாலாஜாவில் பிரிட்டிஷ் காலத்தைய சிறிய அணையை நீர்த்தேக்கி வைக்கும் வகையில் மேம்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இறைவன்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருதி ஆகிய 4 இடங்களில் பொய்கையில் சிறிய அளவிலான தடுப்பணையும், இறைவன்காடு, அரும்பருதி, சேண்பாக்கத்தில் தரைகீழ் தடுப்பணைகளும் கட்டும் பணி தொடங்கியது. இதில் சேண்பாக்கம் தரைகீழ் தடுப்பணை பணிகள் முடிந்துள்ளன. மற்ற இடங்களில் பணி நடந்து வருகிறது. அதேபோல், பாலாற்றின் உபநதியான அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தம்பாடி என்ற இடத்தில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதேேபால் பொன்னையின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய தடுப்பணை தவிர, குகையநல்லூர், பரமசாத்து ஆகிய இடங்களில் சிறிய அளவிலான தடுப்பணைகளும், பாலாற்றின் உபநதியான கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே
குடியாத்தம் செதுக்கரை மற்றும் ரங்கசமுத்திரம் ஆகிய இடங்களில் சிறிய தடுப்பணைகளும் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், பாலாறு மற்றும் அதன் துணைநதிகளில் கட்டப்படும் தடுப்பணைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் பாலாற்றின் நிலத்தடி நீராதாரத்தையும், மணல் கொள்ளையையும் தடுத்து பாலாற்றை காப்பாற்ற முடியும். அதேநேரத்தில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் மூன்று மாவட்டங்களில் பாலாறு மற்றும் அதன் உபநதிகளை நம்பியுள்ள 519 ஏரிகளுக்கு நீர்வரத்து என்பது 50 சதவீதத்துக்கும் கீழாகவே உள்ளது. எனவே, பாலாறு மற்றும் அதன் முக்கிய துணை ஆறான பொன்னையாற்றின் குறுக்கேயும் கூடுதல் தடுப்பணைகளை கட்டி, மூன்று மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையையும், பாலாற்றை காக்க போராடும் சமூக அமைப்புகளின் கோரிக்கையையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post பருவமழை சீசனில் நீராதாரம் பெறும் பாலாற்றில் போதிய தடுப்பணைகள் இன்றி முழுமையாக நிரம்பாத 519 ஏரிகள்: நீர்வரத்துக்கால்வாய்கள் சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.