கொழும்பு: இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றத்திற்காக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அண்மைக்காலங்களில் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 13 படகுகளை இலங்கை கடற்படையினரின் தேவை பயன்பாட்டிற்காக வழங்குமாறு கடல் தொழில் நீரியல் வளாக கிளை பதிவாளர் அறிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற 5 படகுகளும், யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற 8 படகுகளுமாக மொத்தம் 13 படகுகளையும் கடற்படையினரின் தேவைக்காக ஒப்படைக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு பதிப்புரை வழங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அண்மைக்காலமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட படகுகள் திரும்ப வழங்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தலைமையிலான மீன்பிடி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் படகுகள் ஏல விற்பனை செய்யப்பட்டு மீனவர் சங்கங்களுக்கு பயன் அளிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் சில படகுகள் மீனவ அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட 13 படகுகளையும் கடற்படைகளின் தேவைக்காக வழங்குமாறு புதிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு தமிழகத்திலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அது செயல்படுத்தப்பட வில்லை. நேற்றைய தினம் இலங்கையில் அமைச்சர் பதவிகளை ஏற்ற புதிய கடற்தொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திர சேகர் இந்த விவகாரத்தில் தாம் அக்கறை கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் தொடர்ச்சியாக அத்துமீறுவதை தடுக்க தமிழக அரசாங்கம் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கொழும்புவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருந்தார்.
The post தமிழக மீனவர்களின் படகுகளை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.