திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த ஊரும் அடித்துச் செல்லப்பட்டதாக சொல்வது தவறானது என பாஜக மூத்த தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 450க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது தவிர ஏராளமானோர் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டது.
ஏராளமானோர் தற்போதும் நிவாரண முகாம்களில் தான் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நிவாரண உதவி அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்தது. மேலும் நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை கேரள அரசின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. பிரதமர் மோடியும், ஒன்றிய குழுவினரும் நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்ற பின்னரும் இதுவரை கேரளாவுக்கு நிவாரண நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் நிலச்சரிவு பேரிடருக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது குறித்த ஆளும் இடதுசாரி கூட்டணியின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் முரளிதரன் பதிலளித்தார். அதில்; வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த ஊரும் அடித்துச் செல்லப்பட்டதாக சொல்வது தவறானது. 3 வார்டுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. உணர்வுப் பூர்வமாக பேசுவதால் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.
The post வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த ஊரும் அடித்துச் செல்லப்பட்டதாக சொல்வது தவறானது: பாஜக மூத்த தலைவர் முரளிதரன் appeared first on Dinakaran.