×
Saravana Stores

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம்… திமுக உயர்நிலை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாராகுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (20.11.2024) தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:-

தீர்மானம் : 1

தமிழ்நாட்டை மேம்படுத்தி வரும் முதலமைச்சருக்குப் பாராட்டு

மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 பள்ளி மாணவ மாணவியருக்கு தினமும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், குழந்தைகளுக்கு ‘ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்’, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, பெருந்தலைவர் காமராஜர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என இந்தியாவுக்கே முன்மாதிரியான முத்திரை பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றித் தந்து திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த அதிமுக ஆட்சியானது அனைத்து வகையிலும் தமிழ்நாட்டைப் பாழ்படுத்தியிருந்த நிலையை, சீர் செய்தது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை சிறப்புமிகு மாநிலமாக உயர்த்திக் காட்டி வருகிறார் முதலமைச்சர் . மக்கள் நலத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், அனைத்து மாவட்டத் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் எனத் தேர்தல் வாக்குறுதியில், சொன்னதை எல்லாம் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் அடுத்தடுத்து நிறைவேற்றி மக்களுக்காகவே, மக்கள் அரசை நடத்தி வரும் நிர்வாகத் திறமைமிக்க தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவருக்கு இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு தனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் செவிமடுத்து, பார்த்துப் பார்த்துத் திட்டங்களை நிறைவேற்றும் முதலமைச்சராகவும், அதேநேரத்தில், கோட்டையில் இருந்து ஆட்சி செய்தால் மட்டும் போதாது என மாவட்டந்தோறும் நேரடிக் களஆய்வினைத் துவக்கி இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான முதலமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், மாவட்டரீதியாக கழகப் பணிகளையும் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் நம் தலைவர். கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களது எண்ணங்களை அறிந்தும், தனது கருத்துகளைப் பகிர்ந்தும் வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் ஆட்சிப் பணியையும், கட்சிப் பணியையும் செவ்வனே செய்து வரும் திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்த உயர்நிலைத் செயல்திட்டக் குழு மனமாரப் பாராட்டுகிறது.

தீர்மானம் : 2

ஒன்றிய அரசுக்குக் கண்டனம்

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்தி மாதம் வாரம் என விழா எடுப்பது, நாடு முழுவதும் வலியுறுத்தப்பட்டு வரும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வக்ப் வாரிய திருத்தச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் உயிரைப் பறிக்கும் தொடர் இரயில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது, சமக்ர சிக்ஷா போன்ற திட்டங்களின்கீழ் மாநில அரசுக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்காமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதிப்புக்குள்ளாக்குவது, அரசியல் சட்டம் அளித்துள்ள மாநிலங்களுக்கான அதிகாரங்களையும் அபகரிப்பது, அவசர கதியில் கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள், நிதி ஒதுக்கீட்டில் பேரிடர் நிதி வழங்குவதில் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி குறைப்பு, இளைஞர்களைத் திண்டாட வைக்கும் 9.2 விழுக்காட்டிற்கு மேலான வேலைவாய்ப்பின்மை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் மண்டல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டினை ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

2014 தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பத்தாண்டுகளாக நிறைவேற்றாமல் – அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்காமல் மந்த நிலைமையில் ஒன்றிய அரசு இருக்கிறது. இந்திய நாட்டின் அனைத்துத் தார்மீக அறநெறி – அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பா.ஜ.க. அரசு இருக்கிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் சிந்தனைகளைத் தள்ளி வைத்து, இந்தியாவின் அனைத்துத் தர மக்களுக்கும் குறைந்தபட்ச நன்மைகளைச் செய்யும் செயல்களை மூன்றாவது முறை மக்களால் தனிப் பெரும்பான்மை வழங்கப்படாத தேர்தல் முடிவுகளுக்குப் பின்னராவது செய்ய வேண்டும்.

தீர்மானம் : 3

மீனவர்கள் நலன்களைக் காப்பீர்!

இலங்கையில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தலும், இந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று அதிபர் அனுர குமார திசநாயக தலைமையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் ‘தேசிய மக்கள் சக்தி கட்சி’ கூட்டணியின் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள்மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும், மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடும் வகையிலும் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் இப்போதாவது ஒன்றிய பா.ஜ.க. அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ள படகுகளைத் திரும்ப பெறவும், ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இலங்கையின் புதிய அரசிடம் வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும்.

தீர்மானம் : 4

மணிப்பூர் தீயை அணைப்பீர்!

கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. மனித உரிமைகள் பறிக்கப்பட்டு, மனித நேயம் நசுக்கப்பட்டு, மனித பெருந்துயரமே அம்மாநிலத்தை ஆட்டிப் படைக்கிறது. எங்கு பார்த்தாலும் போராட்டம், வன்முறை, தீ வைப்பு, மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல், கலவரம் எனச் சட்டம் ஒழுங்கும் பொது அமைதியும் வரலாறுகாணாத வகையில் சீர்குலைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அப்பாவிக் குழந்தைகள், கைக்குழந்தைகள், பெண்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுவது என மனித நடமாட்டமே அற்றுப் போகுமளவிற்கு அராஜகத்தின் உச்சத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் மணிப்பூர் மாநிலத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு திரும்பிப் பார்க்ககூட நேரமின்றித் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. மேலும், இதுவரை பிரதமர் மோடி ஒரு முறை கூட மணிப்பூர் மாநிலத்திற்குச் செல்லாதது கண்டிக்கத்தக்கதோடு;

மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் மணிப்பூரைக் கை கழுவி விட்டதாகவே தெரிகிறது. இரண்டு அரசுகளின் அலட்சியத்தின் காரணமாக இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. இனியும் வேடிக்கை பார்க்காமல் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து மனிதநேயம் உயிர்பெற ஒன்றிய பா.ஜ.க. அரசு குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5

நிதி உரிமையை நிலை நிறுத்துக!

மாநிலங்களின் அதிகாரத்திற்காகக் குரல் கொடுத்த முதல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வழியில் நின்று தற்போது 16-ஆவது நிதிக் குழுவிடம் மாநில நிதி உரிமைக்காக ஆட்சி சார்பிலும், கட்சி சார்பிலும் வலுவான வாதங்களை எடுத்துவைத்துள்ள கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சருக்கு இந்தக் குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

‘ஒன்றிய வருவாயில் மாநில அரசுக்கு 50 விழுக்காடு நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும், ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50 விழுக்காடு நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும்’ என்பது உள்ளிட்ட ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைத்து இன்றைக்கு 16-ஆவது நிதிக்குழுவின் தலைவர் “தமிழ்நாடு அரசின் சார்பில் ஆயளவநசஉடயளள ஞசநளநவேயவவீடிஸீ செய்யப்பட்டிருக்கிறது” என முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகத் திறன்மிக்க அரசைப் பாராட்டியிருப்பதைப் பெருமிதத்துடன் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது. முதலமைச்சரின் கோரிக்கைகளை வழிமொழிந்த அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தக் கூட்டம் நன்றி செலுத்துகிறது. தமிழ்நாட்டின் கோரிக்கைகள் 16-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும் என்றும், அதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் : 6

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம்.

அன்னைத் தமிழ்நாட்டை உயர்த்தவும், அகில இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி அரசை மலர வைக்கவும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவைக் கண்டு கம்பீரமாக வளர்ந்து வருகிறது. ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட கழகத்துக்கு ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியும் வளமான தமிழ்நாட்டைக் கழக அரசு உருவாக்கி வருகிறது. இனி எந்நாளும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டை ஆளும், ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள். பயனடைந்தவர் சொல்லும் பாராட்டும், பயனாளிகளின் மனநிறைவும் சேர்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மீண்டும் மலர வைக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்நிலையில் கழக அரசின் சாதனைகள், திட்டங்கள், முதலமைச்சரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொள்கிறது.
கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்பும், ஒரு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில் இன்று முதல் தேர்தல் பரப்புரைப் பணிகளைத் தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்குங்கள். ஏழாவது முறையும் ஏற்றம் காண்போம் என்று கோடிக்கணக்கான தொண்டர்களது உள்ளத்துக்கு அன்பான வேண்டுகோளை இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு முன்வைக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம்… திமுக உயர்நிலை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : 2026 Assembly elections ,Chennai ,Chief Minister ,MLA ,Dizuka ,High ,-Level Project ,Committee ,Stalin ,Company Mu. K. ,Level ,2026 Assembly Election ,Dimuka ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு...