×
Saravana Stores

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 25ல் தொடங்குகிறது நவ.24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு

* 23ல் வெளியாகும் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் அவையில் எதிரொலிக்கும்

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி வெளியாகும் நிலையில், அதன் முடிவுகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதால் இக்கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதியின் ஒப்புதலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடக்கும் என ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டுமென பிரதமர் மோடி விரும்புகிறார்.

இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. இதனால், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட அதிக வாய்ப்புள்ளது. இதே போல, வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதில் மாற்றங்களை கொண்டு வரும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் உள்ளது.

கடந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு மசோதாவுக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுமட்டுமின்றி, மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரம் நீடிக்கும் நிலையில், சமீபத்தில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது.

அங்கு அமைதியை மீட்டெடுக்க மாநில பாஜ அரசு முற்றிலும் தோல்வி அடைந்த நிலையில், ஒருமுறை கூட பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது ஏன் என பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இதுமட்டுமின்றி, காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வரக் கோரியும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. இதுதொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் இந்த விவகாரங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குளிர்கால கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது. இதுமட்டுமின்றி, கூட்டத் தொடர் தொடங்கும் முந்தைய நாள் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. சமீபத்தில் அரியானா தேர்தல் முடிவைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் காங்கிரஸ் கட்சி சந்தேகம் கிளப்பியது.

இதே போல, மகாாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகளும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர, வரி வருவாயில் மாநிலங்களுக்கு உரிய பங்கு வழங்குதல், இந்தி திணிப்பு, விவசாயிகள் கோரிக்கை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு என பல விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்தநிலையில், அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரும் வகையில் வரும் 24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி வரும் 24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் நேற்று அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், கூட்டத்தொடரில் அரசின் அலுவல்கள் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்தும் எந்தெந்த விவகாரங்கள் குறித்து அவையில் விவாதிக்க விரும்புகின்றன என்பது குறித்தும் அரசு தரப்பில் கேட்கப்படும். அனைத்து கட்சி கூட்டத்தை தொடர்ந்து குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரவிருக்கும் மசோதாக்கள் குறித்தும், எதிர்க்கட்சிகள் எழுப்பப் போகும் விவகாரங்கள் குறித்தும் விவரங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

* சபாநாயகர் திடீர் ஆய்வு
குளிர்கால கூட்டத்தொடருக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் வரும் 26ம் தேதி அரசியலமைப்பு தினம், டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு தினம், டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்க இருப்பதையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆய்வு செய்தார்.

மக்களவை அறை, காத்திருப்பு அறைகள், ஊடக வசதிகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளை பிர்லா ஆய்வு செய்தார். அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிர்லா ஆய்வு செய்தார்.

The post நாடாளுமன்ற கூட்டத்தொடர் 25ல் தொடங்குகிறது நவ.24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Parliamentary Assembly ,Union Minister ,Kiran Rijiju ,Jharkhand ,Maharashtra ,New Delhi ,All-Party ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில்...