இதனைத்தொடர்ந்து போலீசார், பெங்களூரு சென்று யாரிடம், எந்த இடத்தில் மெத்தபெட்டமின் போதைப்பொருளை வாங்கி வந்தார் என கண்ணனின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவரது கூகுள் மேப் டைம் லைனை பார்த்து அதிதீவிர குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் பெங்களூருக்கு விரைந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கேமரூன் நாட்டை சேர்ந்த ஒருவர், பைக்கில் மெத் போதைப்பொருளை கொடுத்து சென்றிருப்பது பதிவாகியிருந்தது. அதனடிப்படையில், அங்கிருந்த அந்த நபர் சென்ற இடங்களிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அவர் சென்ற இடத்தை அடைந்தனர். அங்கு, பைக்கில் சென்ற நபரின் வீடு எதுவென போலீசாருக்கு தெரியாததால், அந்த தெருவில் சொந்த வீட்டுக்காரர்கள் யார், வாடகை வீட்டுக்காரர்கள் யார், வெளிநாட்டவர் யார் குடியிருக்கின்றனர் என முழு பட்டியலையும் தயாரித்து, அதில் வடிகட்டி அந்த அந்த வெளிநாட்டவரின் வீட்டை கண்டறிந்தபோது, அதில் குறிப்பிடும் படியான நபரின் பைக் இல்லாததால் போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் இரவு முழுவதும் `தீரன் அதிகாரம் ஒன்று’ படப்பாணியில் போலீசார் மாறுவேடத்தில் மறைந்திருந்து வெளிநாட்டவரை பிடிக்க காத்திருந்துள்ளனர். நீண்டநேரம் கழித்து அதே பைக் ஒன்று வருவதாக அங்கிருந்த இன்பார்மர் ஒருவர் சிக்னல் கொடுத்துள்ளார். அப்போது, போலீஸ் இருப்பதை கண்ட போதைப்பொருள் விற்பனை தலைவன், பைக்கில் அதிவேகமாக தப்பிச்செல்ல முயன்றபோது, அவர் பைக்கிலிருந்து கீழே விழுந்து மீண்டும் தப்பிச்சென்றுள்ளார். அப்போது, விரைந்து சென்று மடக்கிப்பிடித்தபோது அவர், போலீசாரை தள்ளிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார். சுமார் 1 கிலோ மீட்டர் துரத்திச்சென்ற போலீசார், சினிமா பாணியில் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் வீட்டின் அறையில் சுமார் 1.30 மணி நேரமாக சோதனையிட்டபோது, போதைப்பொருள் கிடைக்காததால் போலீசார் மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர். கடைசி கட்டமாக அறையிலிருந்த டாய்லெட்டில் தேடியபோது, யாருமே கண்டுபிடிக்கப்படாத வகையில் வாசனை திரவியம் பாட்டிலில் 50 கிராம் மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கேமரா நாட்டை சேர்ந்த ஜோனதான் என்பதும், அவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள யாருமே வராத இடத்தில் லேப் ஒன்றை அமைத்து, அங்கு மெத் போதைப்பொருளை தயாரிப்பதாகவும், அதுவும் கிலோ கணக்கில் தயாரித்தால் போலீசாரிடம் எளிதாக சிக்கிக்கொள்வோம் என்பதால் கிராம் கணக்கில் மட்டுமே தயாரித்து விற்பனை செய்வோம் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜோனதானுக்கு எவ்வளவு கிராம் மெத் போதைப்பொருள் வேண்டுமோ அதைக் கேட்டால் தயாரித்து கொரியர் மூலமாக ஒரு இடத்தில் அவர்கள் கொடுப்பதாகவும், அதனை ஜோனதான் வாங்கி சென்னை டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தரக்கூடிய பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ஏடிஎம் மூலமாக அனுப்பி வைப்பார் எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 13ம்தேதி கைதான கண்ணன், ரகு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஆரணி கண்ணன் என்பவரின் செல்போனை தொடர்ந்து ஆய்வு செய்தபோது, சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றும், பரணி என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதும் ஜிபே மூலம் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, காவலர் பரணியை அழைத்து வந்து விசாரித்தபோது, 3 மாதங்களுக்கு முன் கிரிண்டர் ஆப் மூலம் கேரளாவை சேர்ந்த அபிஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரிடமிருந்து போதைப்பொருளை வரவழைத்து நேரடியாகவும், சக போதைப்பொருள் வியாபாரிகள் மூலமாகவும் விற்பனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து, அயனாவரம் சட்ட ஒழுங்கு காவலர் பரணியை, நேற்று நீலாங்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி, பரணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
The post ஆன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனை அயனாவரம் போலீஸ்காரர் கைது: நீலாங்கரை போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.