வேலூர், நவ.17: பார்ட்டைம் ஜாப்பில் அதிகம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி ₹16.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக டிரைவர் உட்பட 2 பேர் அளித்த புகாரின்பேரில், வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய டிரைவர். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பார்ட்டைம் ஜாப் வழங்குவதாக கூறியுள்ளார். இதையடுத்து, மர்ம ஆசாமிகள் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்து டிரைவர் உள்ளே சென்றுள்ளார். அதில் சில ஹோட்டல், உணவகம் நிறுவனங்களின் பெயரில் ரேட்டிங் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பணி மேற்கொள்ளும்போது அதற்கு முதலீடாக பணம் செலுத்த வேண்டும் என்றும், பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்தால் செலுத்திய பணத்தில் இருந்து கூடுதலாக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என்றும் மர்மநபர்கள் தெரிவித்திருந்தனர்.
இதை நம்பிய டிரைவர் அந்த லிங்க்கில் சென்று ஒரு கணக்கை தொடங்கினார். பின்னர் அந்த கணக்கில் தெரிவிக்கப்பட்ட ரேட்டிங் தொடர்பான பணியை செய்து முடித்தார். அவரும் ஒவ்வொரு பணிகளை முடித்து அதில் கமிஷனாக பணம் சம்பாதித்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் அதிகளவு பணத்தை முதலீடு செய்ய தொடங்கினார். ஆனால் அதற்கான லாபத்துடன் பணத்தை அவரால் பெற முடியவில்லை. மேலும் அதிக பணம் முதலீடு செய்து பணிகளை முடித்து கொடுத்தால் தான் முதலீடு செய்த பணம் கிடைக்கும் என்று மர்மநபர்கள் தெரிவித்துள்ளனர். அவரும் கடந்த 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை பல தவணைகளில் ₹8 லட்சத்து 97 ஆயிரத்து 770 வரை செலுத்தினார். ஆனால் அவரால் அவர் செலுத்திய பணத்தை பெற முடியவில்லை.
இதேபோல், குடியாத்தம் பகுதியை சேர்ந்த 27 வயது பட்டதாரி வாலிபர். இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பார்ட் டைம் ஜாப் லிங்க் அனுப்பி கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி ₹7 லட்சத்து 35 ஆயிரத்து 997 வரை செலுத்தினார். ஆனால் அவரால் அவர் செலுத்திய பணத்தை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து மர்மநபர்கள் பணம் செலுத்த வற்புறுத்தி வந்தனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டிரைவர், பட்டதாரி வாலிபரும் தனித்தனியாக இதுகுறித்து வேலூர் எஸ்பி மதிவாணனிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி உத்தரவிட்டார். தொடர்ந்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி டிரைவர் உட்பட 2 பேரிடம் ₹16.32 லட்சம் மோசடி: வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.