×
Saravana Stores

சிவகாசி நகரில் பார்க்கிங் வசதியின்றி திறக்கப்படும் கடைகளால் நெருக்கடி: பொதுமக்கள் சிரமம்

சிவகாசி, நவ.14: சிவகாசியில் கட்டப்படும் வணிக வளாகங்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இன்றி கட்டடங்கள் கட்டப்படுவதால், ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சிவகாசி நகரில் பல்வேறு புதிய வர்த்தக கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

மேலும் புதிய வணிக வளாக கட்டடங்கள் பல கட்டப்படுகின்றன. இங்கு இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதிகள் ஏற்படுத்துவதில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியின்றி ரோட்டில் நிறுத்திவிட்டு வணிக வளாகங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

இதனால் மெயின் ரோடு, வணிக வளாகங்கள் உள்ள தெருக்களில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மீட்பு வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சிறியது முதல் பெரியது வரையிலான வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் கட்டப்படும் போதே அங்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் கண்காணித்த பின்னரே கட்டடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

சமூக ஆர்வலர் ஜெயக்குமார் கூறுகையில், ரதவீதிகளில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை நெருக்கடியால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனால் நகரில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அவ்விடத்தை கடப்பதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர். அவசரமாக செல்பவர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாக உள்ளது. நகரில் பார்க்கிங் வசதியின்றி திறக்கப்படும் கடைகள் மீது மாநகராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சிவகாசி நகரில் பார்க்கிங் வசதியின்றி திறக்கப்படும் கடைகளால் நெருக்கடி: பொதுமக்கள் சிரமம் appeared first on Dinakaran.

Tags : Crisis ,Sivakasi ,Dinakaran ,
× RELATED சிவகாசி-நாரணாபுரம் சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்