×

ஆர்.கே.பேட்டை அருகே ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: 63 ஆயிரம் ஆடுகளுக்கு செலுத்த இலக்கு

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதன் மூலம் 63 ஆயிரம் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை அம்மையார்குப்பம், அத்திமாசேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் செம்பறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் வளர்ந்து வருகின்றனர். இந்த ஆடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கால்நடைத்துறையின் மூலம் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும். அந்த வகையில், நடப்பாண்டிற்கான தடுப்பூசி நேற்று முதல் தொடங்கி ஒரு மாதத்திற்கு இலவசமாக போடப்படுகிறது.

அதன்படி நேற்று ஆர்.கே.பேட்டை ஒன்றியம் எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளின் இருப்பிடத்திற்குச் சென்று தடுப்பூசி போடப்படும். இதற்காக திருத்தணி கோட்டத்தில் 23 மருத்துவ குழுக்கள் அமைத்து, உதவி மருத்துவர் மேற்பார்வையில் கால்நடை ஆய்வாளர்கள் பராமரிப்பு உதவியாளர்கள், ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர்கள் கொண்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

திருத்தணி கோட்டத்தில் 46,940 வெள்ளாடுகள், 16,060 செம்பறி ஆடுகள் என மொத்தம் 63,000 ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 வயதிற்கு மேல் உள்ள ஆடுகளுக்கும், சினை இல்லாத ஆடுகளுக்கும் மட்டுமே தடுப்பூசி போடப்படும். ஆட்டுக்கொல்லி நோயால் பாதித்த ஆடுகளுக்கு காய்ச்சல், வாய்ப்புண், பேதி மற்றும் நுரையீரல் சுழற்சி காணப்படும். மேலும் தகுந்த நேரத்தில் தடுப்பூசி போடாவிட்டால் 100 சதவீதம் ஆடுகள் இறக்க நேரிடும். செம்பறி ஆடுகளை விட வெள்ளாடுகளுக்கு இந்நோயின் தாக்கம் அதிகளவில் காணப்படும். நோய் பாதித்த 5 முதல் 10 நாட்களில் இறப்பு ஏற்படலாம். எனவே ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் கிராமங்களில் தடுப்பூசி போட வரும் மருத்துவ குழுவினரிடம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

The post ஆர்.கே.பேட்டை அருகே ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: 63 ஆயிரம் ஆடுகளுக்கு செலுத்த இலக்கு appeared first on Dinakaran.

Tags : Goat ,RK Pettah ,RK Pettai ,Ammaiyarkuppam ,Athimaserippet ,Pallipatta ,Pothatturpettai ,Tiruvallur district ,Goat killer disease ,Dinakaran ,
× RELATED தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்