சொத்துக்களை விற்று தொழில் தொடங்கி கொடுத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்

*நடவடிக்கை கோரி குறைதீர்வு கூட்டத்தில் மனு

ராணிப்பேட்டை : பெட்ரோல் பங்க், எலக்ட்ரிக்கல் கடை வைத்துக்கொடுத்த தந்தையை துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சந்திரகலா குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் டி.ஆர்.ஓ சுரேஷ், திட்ட இயக்குனர் ஜெயசுதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், உதவி ஆணையர் கலால் வரதராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைநம்பி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் ஆகியோரும் பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில் ஆற்காடு வட்டம் மோசூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் நாராயணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தில் மோசூர் காந்தி நகர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பல் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பைப்லைன் அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இதுநாள் வரை போர்வெல் மட்டுமே அமைந்துள்ளனர். பணிகள் முடிவடையாமல் பாதிலேயே கைவிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை முறையாக பயன்படுத்தினார்களா என சந்தேகம் எழுகிறது. மக்களின் குடிநீர் பிரச்னை போக்க இந்த பணியினை முழுமையாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரக்கோணம் அடுத்த சின்னகைனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேற்கண்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தில் இருந்து அரக்கோணம் செல்வதற்கு இந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டினை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்தது. பணி தொடங்கி சில மாதங்களிலேயே பல்வேறு காரணங்களுக்காக இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் தண்டவாளத்தை கடந்து தான் ஆபத்தான முறையில் தினமும் செல்ல வேண்டி உள்ளது.

பாலத்தினை கடக்கும் பாதை மண் சாலையாகவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியும் நிற்கிறது. எனவே, சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கலவை தாலுகா செய்யாத்து வண்ணம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆதிகேசவன்(75) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற எனக்கு 75 வயதாகிறது.

என் மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நான் எங்களுடைய பூர்வீக நிலங்களையும், நான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களையும் விற்பனை செய்து எனது இரண்டு மகன்களுக்கு சொந்தமாக தொழில் செய்ய பெட்ரோல் பங்க் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை என இரண்டு பேருக்கும் வைத்து கொடுத்தேன். இந்த நிலையில் என்னை இரண்டு மகன்களும் துன்புறுத்துகின்றனர்.

மேலும் நான் இருக்கும் வீட்டில் இருந்து என்னை துரத்திவிட்டனர். எனவே எனது மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நான் கட்டிய வீட்டில் எனது ஆயுட்காலம் வரை குடியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது மகன்கள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து என்னை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை,கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, பொது பிரச்னைகள், குடிநீர்வசதி, வேலை வாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொது நலன் குறித்து என 354 மனுக்கள் வரப்பெற்றன.

இதனை தொடர்ந்து அரக்கோணம் வட்டம், பள்ளூர் கிராமத்தைச் சார்ந்த அமுலு என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், முன்னாள் ராணுவ படைவீரர் நலத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைக்கான ஆணையினையும் கலெக்டர் சந்திரகலா வழங்கினார். கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

The post சொத்துக்களை விற்று தொழில் தொடங்கி கொடுத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள் appeared first on Dinakaran.

Related Stories: