செங்கம், நவ.12: செங்கம் அருகே பைக் மீது மினி லோடு வேன் மோதிய விபத்தில் மாணவன், ஓட்டல் தொழிலாளி பலியாகினர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த முறையாறு கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் அருண்(22). அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு முறையாறு கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் முரளி(23) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் கருணாமூர்த்தி(17). காயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் மகன் கோகுல்(14). கருணாமூர்த்தி 12ம் வகுப்பும், கோகுல் 10ம் வகுப்பும் படித்து வந்தனர். நண்பர்களான 4 பேரும் நேற்று முன்தினம் இரவு செங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட சென்றனர். பின்னர் இரவு 10.30 மணியளவில் 4 பேரும் ஒரே பைக்கில் வீடு திரும்பினர். முறையாறு அருகே வந்தபோது சிங்காரப்பேட்டை நோக்கி சென்ற மினி லோடு வேன், பைக் மீது மோதியது. இதில் அருண் உட்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். முரளி, கோகுல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அருண், கருணாமூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல் கட்டுப்பாட்டை இழந்த லோடு வேன் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த சிறுவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், செங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கருணாமூர்த்தி, அருண் இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அருண் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பலியான முரளி, கோகுல் ஆகியோரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது லோடு வேன் மோதி மாணவன் உட்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post பைக் மீது மினி லோடு வேன் மோதி மாணவன், ஓட்டல் தொழிலாளி பலி 12 பேர் காயமடைந்தனர் செங்கம் அருகே சோகம் appeared first on Dinakaran.