துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவில் மூதாட்டி சடலம் மீட்பு: கொலையா என விசாரணை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம் மடு வழியாக மழைநீர் தடையின்றி செல்வதற்கு வசதியாக, பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களாக மடுவில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 60 வயதுடைய மூதாட்டியின் சடலம் மிதந்துள்ளது. இதகைண்டு, அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில், கண்ணகி நகர் போலீசார், துரைப்பாக்கம் தீயணைப்புத்துறை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள், மூதாட்டியின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து போலீசார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதி செய்த போலீசார், மடுவில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர், ஒக்கியம் மடுவில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவில் மூதாட்டி சடலம் மீட்பு: கொலையா என விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: