திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையின் பின்புறம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலும் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வரும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த நிலையில், தற்போது தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக தற்போது ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் நீர்வீழ்ச்சி வந்து செல்கின்றனர். அதன்படி, ஞாயிறு விடுமுறை தினமான நேற்று ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் திரண்டு ஆனந்த குளியல் போட்டனர். நேற்று திருப்பத்தூர் மற்றும் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் நீர்வீழ்ச்சியில் குளியல் போட்டது குறிப்பிடத்தக்கது.
The post தொடர் மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் appeared first on Dinakaran.