×
Saravana Stores

நாகர்கோவிலில் விதிமுறை மீறி வந்த டாரஸ் லாரி, 2 டெம்போக்கள் பறிமுதல்

* டிராபிக் போலீஸ் அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில் : குமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி. லலித்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் உட்கோட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டு விபத்துகள் ஏற்படுத்தி வரும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இறச்சகுளத்தில் இருந்து புத்தேரி வழியாக நான்கு வழிச்சாலை நோக்கி கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இறச்சக்குளத்தில் இருந்து துவரங்காடு, ஆரல்வாய்மொழி வழியாக கனரக வாகனங்கள் செல்ல வேண்டும்.

இந்நிலையில் நேற்று நாகர்கோவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் எஸ்.ஐ.க்கள் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் மற்றும் போலீசார் புத்தேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது இறச்சகுளத்தில் இருந்து புத்தேரி நோக்கி சமூகரெங்கபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்த கனிம வள கனரக வாகனத்திற்கு ரூ.5000 அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல் நாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் லோடு வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதை மீறி, வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதன்படி நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் வடசேரி பகுதியில் மர லோடு ஏற்றி வந்த ஒரு டெம்போவை டிராபிக் போலீசார் பறிமுதல் செய்தனர். மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள், லோடு வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 8 மணி அதிகளவில் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் நேரம் ஆகும். இதையடுத்து அந்த டெம்போவை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதே போல் கலெக்டர் அலுவலகம் அருகே வாகன சோதனையின் போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த (மரலோடு) டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஒரு லாரி டிரைவர், 2 கார் டிரைவர்கள், ஒரு ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post நாகர்கோவிலில் விதிமுறை மீறி வந்த டாரஸ் லாரி, 2 டெம்போக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Taurus ,Nagercoil ,Kumari District SP ,Sundaravathanam ,Lalit Kumar ,Nagercoil Utkotam ,
× RELATED ரிஷபம்