×

காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டிக்கொன்ற கணவன் கைது: கிருஷ்ணகிரி அருகே சடலம் மீட்பு

திருவண்ணாமலை, நவ.11: திருவண்ணாமலையில் காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டிக்கொன்ற கணவனை கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி அருகே சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை பே கோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி(36). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சரண்யா(29). திருவண்ணாமலையில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் சரண்யா வேலை செய்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 31ம் தேதி தீபாவளி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் திடீரென்று சரண்யா மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மகள் சரண்யாவை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பேச முடியாததால், அவரது தாயார் அரசுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த காவேரி திருவண்ணாமலைக்கு நேரில் வந்து விசாரித்தார். ஆனால், சரண்யா சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் காவேரி உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடினார். ஆனாலும், சரண்யா கிடைக்கவில்லை. இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் தனது மகள் காணவில்லை என காவேரி புகார் அளித்தார்.

மேலும், தனது மருமகன் கோபி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் இளம்பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து, திருவண்ணாமலை போலீசார் நேற்று கிருஷ்ணகிரிக்கு சென்றனர். அப்போது, அங்கு இறந்து கிடந்தது சரண்யா என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கொலை செய்து சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி எடுத்துச்சென்று கிருஷ்ணகிரி அருகே சாலை ஓரத்தில் வீசி விட்டு வந்தாரா? அல்லது எப்படி கொலை அரங்கேறியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டிக்கொன்ற கணவன் கைது: கிருஷ்ணகிரி அருகே சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Thiruvannamalai ,Tiruvannamalai ,Krishnagiri ,Gopi ,Thiruvannamalai Bay Gopuram Main Road ,
× RELATED அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் குவிந்த மக்கள்