மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மானிய விலையில் மீன்பிடி வலைகள் பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், நவ. 11: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் அரசின் மானிய விலையில் மீன்பிடி வலைகள் பெற்றிட விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்தவும் அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாகவும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு 50 சதவிகித மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என 2024-25ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20 கிலோ நைலான் வலையினை ரூ.20 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் தொகையில் 50 சதவிகிதம் அதாவது ரூ.10 ஆயிரம் பின்னேற்பு மானியமாக மீனவர்களுக்கு வழங்கப்படும். இதேபோன்று, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பரிசல்களுக்கு 50 சதவிகிதம் அதாவது ரூ.10 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

உள்நாட்டு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு மீன்பிடி வலைகள் 50 சதவிகித மானியத்தில் வழங்கிட 5 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி, திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீன்வளர்ப்பு விவசாயிகள் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மீன்வளர்ப்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் உள்நாட்டு மீனவர்களிடமிருந்து அதிகம் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே விருப்பமுள்ள மீனவர்கள் வரும் 20ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு, கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மானிய விலையில் மீன்பிடி வலைகள் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: