×

பயணிகள் நடந்து செல்லும் பாதைகளில் மது பாட்டில்கள்: குடிமகன்களின் கூடாரமாகும் டவுன் ரயில்வே ஸ்டேஷன்

சேலம், நவ.11: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து, பயணிகள் நடந்து செல்லும் பாதைகளில் அமர்ந்து மது குடிப்பதை குடிமகன்கள் வாடிக்கையாக கொண்டுள்ளதால், குடிமகன்களின் கூடாரமாக ரயில்வே ஸ்டேஷன் மாறி வருகிறது. இதனால், எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகரின் மையப்பகுதியில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இந்த டவுன் ரயில்வே ஸ்டேஷன் வழியே சேலம்-விருத்தாச்சலம்-கடலூர் துறைமுகம் ரயில், பெங்களூரு-காரைக்கால் ரயில், மங்களூரு-புதுச்சேரி எக்ஸ்பிரஸ், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் இயங்கும் சேலம்-கடலூர் துறைமுகம் ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள், டவுன் ஸ்டேஷனில் இருந்து ஏறி பயணிக்கின்றனர்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்தும், சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியான ஆத்தூரில் இருந்து ஏராளமான வியாபாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் டவுன் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கி செல்கின்றனர். இந்த பயணிகள் செல்லும் நடைமேம்பால பாதைகளில் மது பாட்டில்களாக இருக்கிறது. அதுபோலவே ஸ்டேஷனின் மறுபுறம் உள்ள மரவனேரி சாலை பகுதியிலும் மது பாட்டில்கள் குவியலாக காணப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம், டவுன் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடை தான். தினமும் இரவு வேளையில் அந்த டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கும் நபர்கள், நேரடியாக ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து, அவர்களின் கூடாரமாக மாற்றிவிடுகின்றனர். நீண்ட நேரத்திற்கு நடைபாதைகளில் அமர்ந்திருந்து மது குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர்.

சில நேரங்களில் மது பாட்டில்களை உடைத்து வீசியும் செல்கிறார்கள். இதனால், டவுன் ரயில்வே ஸ்டேஷனே மதுபான கூடாரமாக காட்சியளிக்கிறது. இதுபற்றி ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் வழியே கடைசியாக இரவு 9 மணிக்கு எழும்பூர் எக்ஸ்பிரஸ் செல்கிறது. அந்த ரயிலுக்கு செல்ல ஸ்டேஷனுக்கு செல்லும்போதே வழியில் குடிமகன்கள் குழுமியிருக்கிறார்கள். ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுவை வாங்கி வந்து குடிக்கிறார்கள். அதனால், இந்த ரயில்வே ஸ்டேஷனை சுத்தமாகவும், மதுபாட்டில்கள் இல்லாத நிலையிலும் மாற்ற வேண்டும் என்றால், எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இதை வலியுறுத்தி ரயில்வே அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துவிட்டோம். ஆனாலும், அந்த டாஸ்மாக் கடையை மாற்றாததால், குடிமகன்களின் தொல்லை அதிகளவு உள்ளது,’’ என்றனர்.

‘‘டாஸ்மாக் கடையை அகற்ற கோரியுள்ளோம்’’
சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் மது பாட்டில்களாக இருப்பது பற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இரவு நேரத்தில் ஸ்டேஷனுக்குள் குடிமகன்கள் புகுந்து விடுகின்றனர். ஆர்பிஎப் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணித்தாலும், எப்படியாவது உள்ளே வந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால், இன்னும் அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படாமல் இருக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மீண்டும் வலியுறுத்தவுள்ளோம்,’’ என்றனர்.

The post பயணிகள் நடந்து செல்லும் பாதைகளில் மது பாட்டில்கள்: குடிமகன்களின் கூடாரமாகும் டவுன் ரயில்வே ஸ்டேஷன் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Town ,Tasmac ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்