புதுக்கோட்டை, நவ.11: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 6 அணைக்கட்டுகளை மராமத்து செய்வதற்கு ரூ.8.57 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் மழை காலத்தில் மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆறுகளில் பல்வேறு இடங்களில் உள்ள அணைக்கட்டுகளின் மூலம் ஏரி, கண்மாய்களுக்கு தண்ணீரை திருப்பி பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வப்போது ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வந்தாலும்கூட அணைக்கட்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தன. இதனால் தண்ணீரை பகிர்ந்து பயன்படுத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து, அணைக்கட்டுகளை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் 6 அணைக்கட்டுகளை புனரமைக்க ரூ.8.57 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி அருகே மானியவயலில் அக்னியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு பழுதடைந்துள்ளது. இதை புனரமைக்க ரூ.95.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, அரிமளத்தில் உள்ள கூடலூர் அணைக்கட்டில் வலது மதகை பழுது பார்த்து, பாதுகாப்பு சுவரைப் புதுப்பிக்க ரூ.1.48 கோடியும், பெருமருதூரில் உள்ள மணலூர் அணைக்கட்டு புனரமைக்க ரூ.96.37 லட்சமும், அறந்தாங்கி அருகே புதுவாக்கோட்டை அணைக்கட்டை புனரமைக்க ரூ.1.44 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமயம் அருகே கும்மங்குடியில் உள்ள அணைக்கட்டை புனரமைக்க ரூ.1.20 கோடியும், கடையக்குடியில் உள்ள ஹோல்ஸ்வொர்த் அணைக்கட்டு மற்றும் அதில் உள்ள திருகு பலகைகளை புதுப்பிக்க ரூ.2.51கோடி என மொத்தம் 6 அணைக்கட்டுகளை புனரமைக்க ரூ.8.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடியில் உள்ள பெரியகுளத்தை புனரமைக்க ரூ.96.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியில் விவசாயிகள் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளால் அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி எப்போதும் நிலத்தடி நீர் குறையாமல் இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தொய்வின்றி கிடைத்தது. குறிப்பாக அந்த பகுதிகளில் இருந்து பல பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. இப்படி பல வழிகளில் பயனுள்ள அணைக்கட்டுகள் புனரமைக்கமால் இருப்பதால் மழை காலத்தில் தண்ணீர் தொடர்ந்து வீணாகி வந்தது. மதகுகள், சுவர்கள் சேதமடைந்து இருந்தது. இதனால் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம். ரூ.8.57 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தற்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். விரைந்து பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும். பணிகள் முறையாக தொய்வின்றி நடக்க வேண்டும். பழுதுகள் சரியானால் அணைக்கட்டுகளில் இருந்து தேவையற்ற இடங்களில் தண்ணீர் வீணாக வெளியேறாது. இதனால் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கி இருக்கும். அந்த அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் தொடர்ந்து அதிகரிக்கும். இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்றனர்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.8.57 கோடியில் 6 அணைகள் மராமத்து பணி appeared first on Dinakaran.