பெரம்பலூரில் 15ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

பெரம்பலூர்,நவ.11: பெரம்பலூரில் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறியஅளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 15 ம் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :
தனியார்த் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனு தாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலை வாய்ப்பு முகாம்” பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடை பெற்று வருகிறது.

அதனடிப்படையில் நவம்பர் -2024 மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் துறை நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களை கல்வித் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

இந்தத் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலை யளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவன விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள அவர்களது, வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த் துறை நிறுவனங்களும் வருகிற 15ஆம்தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் 15ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: