நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை முதல் 2.30 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி பணி

நாகப்பட்டினம், நவ.10: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி தடுப்பூசிகள் போடும் பணி நாளை (11ம் தேதி) முதல் தொடங்குகிறது.

நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டுக் கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தின் தடுப்பூசிப்பணி நாளை (11ம் தேதி) தொடங்கி 30 நாட்களுக்கு நடைபெறுகிறது.வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக் கொல்லி நோய் ஒன்றாகும். இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீர், கண்ணீர், கழிச்சல் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும்.

இந்நோய் தாக்காமல் இருக்க வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தடுப்பூசிப் பணி போட வேண்டும். இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையால் ஆட்டுக் கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போடப்படுகிறது. நாளை தொடங்கி 30 நாட்களுக்கு நடைபெறும் தடுப்பூசி பணியில் மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 34 குழுக்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் கிராம வாரியாக தடுப்பூசிபணி மேற்கொள்ளப்படும்.

எனவே, ஆடுகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது, 4 மாதத்திற்கு குறைவான வயதுள்ள ஆட்டுக் குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகள் தவிர மற்ற அனைத்து வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கும் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். மேலும் அதன் விவரத்தை தேசிய மின்னணு கால்நடை இயக்க செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கென ஆடுகளுக்கு பார்கோடுடன் கூடிய வெளிறிய ஊதா நிறா காதுவில்லைகள் அணிவிக்கப்பட்டு ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணுடன் உரிமையாளர் மற்றும் கால்நடைகள் விவரங்கள் பதிவு செய்யப்படும். எனவே மேற்காணும் தடுப்பூசி பணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை முதல் 2.30 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி பணி appeared first on Dinakaran.

Related Stories: