சென்னை: சென்னையில் ரூ.16 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அருப்புக்கோட்டை அருகே நாட்டு வைத்தியர் வீட்டில் சென்னை போலீசார் ஆய்வு செய்தனர். சென்னையில் ரூ.16 கோடி மதிப்பிலான 16 கிலோ மெத்தாம்பெட்டமின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த போதை பொருள் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கோவிலாங்குளத்தில் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே 100 மீட்டர் தொலைவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அந்த வீட்டில் ஏஎஸ்பி மதிவாணன் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அந்த வீடு, மதுரையை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. முருகன் நாட்டு வைத்தியர் எனவும், வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமை மட்டும் அங்கு வந்து வைத்தியம் செய்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீசார் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் முருகன் வீட்டை சோதனை செய்துள்ளனர். அங்கு போதை பொருள் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசாரின் விசாரணை முடிவில் தெரிய வரும் என கூறப்படுகிறது.
The post ரூ.16 கோடி மெத்தாம்பெட்டமின் பறிமுதல் வழக்கில் நாட்டு வைத்தியர் வீட்டில் சென்னை போலீசார் ஆய்வு appeared first on Dinakaran.