சென்னை: சென்னையில் அனுமதி பெறாமல், ஒழுங்கற்ற முறையில் இன்டர்நெட் நிறுவன கம்பங்கள் இருந்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,”சென்னையில் 15 மண்டலங்களிலும் அனுமதி பெறாமல் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். அனுமதித்ததை விட அதிக கம்பங்கள் நடப்பட்டிருந்தால் கம்பங்களுக்கு தலா ரூ.75,000 அபராதம். வசூலிக்கப்படும். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 1.75 லட்சம் இன்டர்நெட் கம்பங்கள் நட அனுமதிக்கப்பட்டுள்ளது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் சாலைகளின் பெயர் பலகைகள் டிஜிட்டல் பலகைகளாக மாற்ற அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8,340 பழைய பெயர் பலகைகளை நீக்கிவிட்டு புதிதாக டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சியில் தற்காலிக மழலையர் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்காலிக மழலையர் ஆசிரியர்கள் ரூ.11,970 பெறும் நிலையில் அது ரூ.14,150ஆக உயர்த்தப்படுகிறது. தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில்
மேயர் பிரியா பேசுகையில், “சென்னை மாநகராட்சியில் மொத்தம் 5,061 காலி பணியிடங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் புதிய பள்ளிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. கூடுதலாக 5 நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்திட மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன,”இவ்வாறு தெரிவித்தார்.
The post டிஜிட்டல் பலகைகளாகும் சாலை பெயர்கள்.. அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.