×

நீண்ட கால கோரிக்கையான இசிஆர் – ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடங்கியது: ஓஎம்ஆர் பகுதியில் 670 மீட்டர் பணி நிறைவு

* 3.2 ஏக்கர் தனியார் நிலத்திற்கு நோட்டீஸ், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

நீண்ட கால கோரிக்கையான இசிஆர் – ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையின் மிக முக்கியமான சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் உள்ளன. இசிஆர் சாலையில் பொழுதுபோக்கு பூங்காக்களும், ஓஎம்ஆர் சாலையில் ஐ.டி. நிறுவனங்களும் அதிகளவில் உள்ளன. கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

ஆனால், இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் மிகக்குறைந்த அளவிலான சாலைகள் உள்ளன. இரண்டு சாலைகளுக்கும் இடையில் பக்கிங்காம் கால்வாய் செல்வதால், அதனை கடக்கும் வகையில் திருவான்மியூர், சோழிங்கநல்லூர் என இரண்டு இடங்களில் பாலங்களுடன், இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த இணைப்பு சாலைகளை அடைய பல கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டியுள்ளது. குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும். அதிலும் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கில் நீலாங்கரை மற்றும் துரைப்பாக்கத்தை இணைக்கும் வகையில் சிறிய சாலையாக பாண்டியன் சாலை அமைந்துள்ளது.

இந்த ஒரு பகுதியில் மட்டுமே பக்கிங்காம் கால்வாய் மேல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதன்படி பாண்டியன் சாலை வழியாக 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஓஎம்ஆரில் உள்ள துரைப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சென்றடையலாம். இல்லை என்றால் பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், அங்கிருந்து மீண்டும் இடதுபுறம் திரும்பி கொட்டிவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி அடைந்து துரைப்பாக்கத்தை சென்றடைய வேண்டும்.

திருவான்மியூர், சோழிங்கநல்லூர் தவிர்த்து அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் இந்த தரைப்பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது. அதாவது இருவழியாக இல்லாமல் ஒரு வழிச்சாலையாகவே பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் நீலாங்கரை மற்றும் துரைப்பாக்கத்தை இணைக்கும் தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்துவதோடு அதில் இருவழிப்பாதையாக வாகனங்கள் செல்லும் வகையில் உயர்த்தி கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2020ம் ஆண்டு ரூ.204.2 கோடியில் இசிஆர்- ஓஎம்ஆர் சாலையின் 1.4 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது கட்டுமானத்திற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நெடுஞ்சாலைத்துறை மெட்ரோ விங் மூலம் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் நிலம் கையப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு துரைப்பாக்கம் பகுதியில் பிஎஸ்ஆர் மாலுக்கு எதிராக வேலைகள் தொடங்கப்பட்டு 670 மீட்டருக்கு பணிகள் முடிந்தது. ஆனால் இசிஆர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது இசிஆர் சாலையில் 3.2 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்த ரூ.142 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையாக நிலங்கள் கையகப்படுத்திய உடன் கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நீண்ட கால கோரிக்கையான இசிஆர் – ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடங்கியது: ஓஎம்ஆர் பகுதியில் 670 மீட்டர் பணி நிறைவு appeared first on Dinakaran.

Tags : OMR ,Highways Department ,Chennai ,East Coast… ,ECR ,Dinakaran ,
× RELATED நாளை புத்தாண்டு கொண்டாடப்படுவதை...