மும்பை: ஆன்லைன் மூலமாக பிரபல குற்றவாளிகளான தாவூத், லாரன்ஸ் ஆகியோரின் உருவ டி-ஷர்ட் விற்ற இ-காமர்ஸ் இணையதளங்கள் மீது மகாராஷ்டிரா போலீஸ் அதிரடியாக வழக்கு பதிந்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட தாவூத் இப்ராகிம் தற்போது வரை தலைமறைவாக இருக்கிறான். அவனை இன்னும் இந்திய புலனாய்வு ஏஜென்சிகளால் பிடிக்க முடியவில்லை. அதேபோல் சமீப காலமாக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் 70க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இவனுக்கு பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கொலைகளுக்கு ெதாடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பிஷ்னோய் கும்பலால் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாவூத் இப்ராகிம், லாரன்ஸ் பிஷ்னோயின் உருவம் கொண்ட டி-ஷர்ட் ஆடைகள், பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்கப்படுவதாக மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து தாவூத் இப்ராகிம் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோரின் படங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை விற்பனை செய்ததாக இ-காமர்ஸ் இணையதளங்களான பிளிப்காரட், அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இணைய தளங்கள் மீது மகாராஷ்டிர சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிரபல குற்றவாளிகளின் படங்கள் கொண்ட டி-ஷர்ட்டுகளை விற்பனை செய்வதால், சமூகத்திற்குள் அச்சுறுத்தல் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும். லாரன்ஸ், தாவூத்தின் படம் பொறித்த டி-ஷர்ட் 1,500 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அந்த நிறுவனங்களில் சோதனையிடப்பட்டது. வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.
The post ஆன்லைன் மூலமாக பிரபல குற்றவாளிகளான தாவூத், லாரன்ஸ் உருவ டி-ஷர்ட் விற்ற இ-காமர்ஸ் இணையதளங்கள் மீது வழக்கு: மகாராஷ்டிரா போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.