குன்னூரில் தொடரும் மழையால் நடைபாதை இடிந்து விழுந்து பாதிப்பு

குன்னூர் : குன்னூரில் தொடரும் மழையால் வீட்டின் மேல் மரம் விழுந்ததை தொடர்ந்து நடைபாதையும் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.  நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. பெரும்பாலும் இந்தாண்டு பெய்து வரும் கனமழையால் மண்சரிவு, மரங்கள் விழுதல் போன்ற சாலை பாதிப்புகளே அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் குன்னூர் அருகே பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட ஐயப்பன் காலனி பகுதியில் சொக்கலிங்கம் என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊராட்சி தலைவர் சுசீலா பார்வையிட்டார். ஆனால் 5 நாட்கள் ஆகியும் ஊராட்சி நிர்வாகம், வீட்டின் மேல் விழுந்த மரத்தை அகற்றாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் உயிருக்கு பயந்து வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதேபோல அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் எதிரே, மழையினால் அடித்து செல்லப்பட்ட நடைபாதை சீரமைக்கப்படாததால், மாணவ, மாணவிகள் கழிவுநீர் கால்வாய்களில் தவறி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் குன்னூர் – கோத்தகிரி சாலையில் உள்ள வண்டிச்சோலை தனியார் கல்லூரிக்கு கீழ் உள்ள பகுதியில், அடார் எஸ்டேட் செல்லும் நடைபாதை முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களை முறையாக ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூரில் தொடரும் மழையால் நடைபாதை இடிந்து விழுந்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: