×
Saravana Stores

திரைப்படங்களில் நடிக்க அமைச்சர் சுரேஷ் கோபிக்கு ஒன்றிய அரசு திடீர் தடை: பல மாதமாக வைத்திருந்த தாடியை எடுத்தார்

திருவனந்தபுரம்: சினிமா படங்களில் நடிப்பதற்கு ஒன்றிய அரசு தடை விதித்ததை தொடர்ந்து இணையமைச்சர் சுரேஷ் கோபி. ஒற்றக்கொம்பன் என்ற படத்திற்காக பல வருடங்களாக வளர்த்து வந்த தாடியை எடுத்துவிட்டார். பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. கடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சில மலையாள படங்களில் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால், தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சுரேஷ் கோபி கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு அமித்ஷா மறுத்துவிட்டார். ஆனாலும் ஒன்றிய அமைச்சர் பதவியை விட தனக்கு நடிப்பு தான் முக்கியம் என்றும், விரைவில் படங்களில் நடிக்க அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாக சுரேஷ் கோபி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இதற்கிடையே ஒற்றக்கொம்பன் என்ற படத்தின் கேரக்டருக்காக கடந்த சில வருடங்களாக தாடியும் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் படங்களில் நடிப்பதற்கு சுரேஷ் கோபிக்கு ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதனால் ஒற்றக்கொம்பன் படத்திற்காக வளர்த்து வந்த தாடியை சுரேஷ் கோபி எடுத்து விட்டார். தாடி இல்லாத தனது படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மாற்றம் இல்லாதது மாற்றத்திற்கு மட்டும்தான் என்று தன்னுடைய படத்திற்கு கீழே அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் சம்பளம் பெறும் வேறு பணியில் ஈடுபட கூடாது என்பது சட்டமாகும். அதனால்தான் சுரேஷ் கோபிக்கு படங்களில் நடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த படத்திற்காக அடுத்த மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் கோட்டயம் அருகே பாலாவில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறும் திருவிழா காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த காட்சியில் சுரேஷ் கோபியும் நடிக்க இருந்தார். கடந்த வருட திருவிழாவிலும் இந்த படத்திற்காக இங்கு காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த வருடமும் திருவிழா நாட்களில் இங்கு ஷூட்டிங் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த படத்தில் நடிக்க சுரேஷ் கோபிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வருடமாவது தனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளார்.

The post திரைப்படங்களில் நடிக்க அமைச்சர் சுரேஷ் கோபிக்கு ஒன்றிய அரசு திடீர் தடை: பல மாதமாக வைத்திருந்த தாடியை எடுத்தார் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Minister ,Suresh Kobi ,Thiruvananthapuram ,Suresh Gobi ,EU government ,Suresh Kobe ,Lok Sabha ,Thrissur ,
× RELATED ஒருசார்பாக தகவல்கள் வெளியீடு...