×
Saravana Stores

ரிசர்வ் வங்கி நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம்; எழும்பூர்-கடற்கரை 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகளில் தொய்வு: ஆர்டிஐ மூலம் தகவல்

சென்னை: ரிசர்வ் வங்கி நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் எழும்பூர் முதல் கடற்கரை வரை 4வது ரயில் வழித்தடம் அமைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில், தற்போது சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை-எழும்பூர் இடையே செல்லும் போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையில் 4வது வழித்தடம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு பணிகளை நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4.5 கி.மீ., தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பில் புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது வழித்தட பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. 14 மாதங்களுக்கு பிறகு பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நடைமேடை பணிகளை நடைபெற்று வருவதால் அந்த ரயில் நிலையத்தில் மட்டும் ரயில்கள் நிறுத்தப்படாமல் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 4வது வழித்தடம் அமைப்பதற்கு ரிசர்வ் வங்கியின் நிலத்தை கையப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனவும் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சமூகஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் கூறியதாவது: 278 சதுர மீட்டர் கொண்ட ரிசர்வ் வங்கியின் நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் 4வது வழித்தடம் முழுமையாக முடிவுறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 278 ச.மீட்டரில் 73 சதுர மீட்டர் மட்டுமே சாலையாக உள்ளது. மீதமுள்ள இடங்களில் சோலார் தகடுகள் உள்ளன. எனவே இரண்டு துறைகளும் உரிய தீர்வு எடுக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்ய உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி கூடுதல் ரயில்கள் இயக்கவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ரிசர்வ் வங்கி நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம்; எழும்பூர்-கடற்கரை 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகளில் தொய்வு: ஆர்டிஐ மூலம் தகவல் appeared first on Dinakaran.

Tags : RBI ,Egmore-Katakarai ,RTI ,CHENNAI ,Egmore ,Chennai Coast- ,Tambaram Corridor ,Chennai Coast ,Egmore- ,Kadakarai 4th railway line ,Dinakaran ,
× RELATED நவம்பர் 1 முதல் அமலாகும் புதிய...