×

கருப்பைவாய் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் என்ன?.. பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்


சென்னை: கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரிக்கிறது என பொதுசுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் இடத்தில் மார்பக புற்றுநோயும், அடுத்தாக கருப்பைவாய் புற்றுநோயும் உள்ளன. குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோயால் வளர்ந்து வரும் நாடுகளான ஆஃப்ரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். பெண்களின் கர்ப்பப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதியைத்தான் கருப்பைவாய் (cervix) என்கிறோம். இந்த சிறிய பகுதியில் ஏற்படும் புற்றுநோய்தான் கருப்பைவாய் புற்றுநோய் என கூறப்படுகிறது. 2022ம் ஆண்டு சுமார் தரவுகள்படி 6,60,000 பெண்கள் பாதிக்கப்பட்டதும் அதில் 3,50,000 இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியளவில் தமிழகத்தில்தான் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு 1,27,526 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 79,906 பெண்கள் இறந்து விடுகின்றனர். இது உலகளாவிய நிகழ்வுகளில் ஐந்தில் ஒரு பங்கு மற்றும் நோயினால் ஏற்படும் இறப்பாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இந்தியா கருப்பைவாய் புற்றுநோய் அதிகரிக்க காரணம் குறித்து தமிழக பொதுசுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் நோயை பற்றி விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் முறையாக சிகிச்சை பெறத்தாலும் இறப்புகள் அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் குறித்தான 9 கட்டுரைகளில் இருந்து தரவுகளை சரியான தரவுகளை பிரித்தெடுத்தல் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் 2 முடிவுகள் கிடைத்துள்ளன. அறிகுறிகள் மற்றும் நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் நோய்க்கான ஆபத்து குறித்து பெண்கள் உணராமல் இருப்பது முதல் முடிவாகவும், கிராமப்புறங்களில் வருமானம் இல்லாதது, குடும்ப ஆதரவு இல்லாதது மற்றும் சமூக இழிவு போன்றவை 2வது முடிவாகவும் கிடைத்துள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் முன்கூட்டியே கண்டறிவதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பகுதிகளில் அதிகஅளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆய்வு மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து தமிழகத்தில் வீடுவீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வீடுவீடாக சென்று துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மக்களை தேடி மருத்துவம் மூலமாக 30 வயதை கடந்த பெண்களிடம் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம். அவர்கள் பரிசோதனைக்கு வந்தால் போதும், மற்றதை மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள். பாதிக்கப்பட்டால் சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருப்பைவாய் புற்றுநோய் தடுக்கும் வழிகள்…
* கருப்பைவாய் புற்றுநோய்கான பரிசோதனை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
* புகைப்பிடிப்பது, மது அருந்துவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கும்.
* போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
* ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* முக்கியமாக எச்பிவி தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

The post கருப்பைவாய் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் என்ன?.. பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Department of Public Health ,CHENNAI ,PUBLIC ,DEPARTMENT ,Public Health Department ,Dinakaran ,
× RELATED சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக...