×

பருவமழை காலங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உள்முக மருத்துவர் பூர்த்தி அருண்

மழை காலம் என்றாலே பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக குழந்தைகள் தொற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக தேங்கி நிற்கும் தண்ணீர், அசுத்தமான உணவு, சுகாதாரமின்மை ஆகியவை பல்வேறு வகையான காய்ச்சல்கள் மற்றும் நோய்களை ஏற்படுத்துகின்றன.

இந்தக் காலத்தில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் வெள்ள காலங்களில் குழந்தைகள் இடையே பரவும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் புரோமெட் மருத்துவமனையின் உள் மருத்துவப் பிரிவு டாக்டர் ஸ்பூர்த்தி அருண் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

வெள்ளத்தின் போது முன்னெச்சரிக்கைகள்

சுத்தமான குடிநீர்: குழந்தைகளுக்கு சுத்தமான மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதற்கு கொடுக்க வேண்டும். தண்ணீரினால் டைபாய்டு மற்றும் காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிகின்றன. இதுவே குடிப்பதற்கு மிகவும் பாதுகாப்பானது.

சுகாதாரம்: சாப்பிடுவதற்கு முன் குழந்தைகள் சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரால் கைகளை கழுவுகிறார்களா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளத் தண்ணீருடன் கழிவுநீரும் கலப்பதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.பாதுகாப்பான உணவு: புதிதாக சூடாக சமைத்த உணவை மட்டுமே உங்கள் குழந்தைக்கு கொடுங்கள். தெருவோர கடைகளில் சமைக்கும் உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள். பழங்களை நன்கு கழுவி கொடுப்பதோடு, உணவுகளை வேக வைக்காமல் அப்படியே பச்சையாக கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருங்கள்: வெள்ளநீரில் குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருக்கலாம், இது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.பாதுகாப்பான ஆடைகள்: கொசுக் கடியிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முழுக்கை சட்டை மற்றும் பேன்ட்களை அவர்களை அணியச் செய்யுங்கள். குறிப்பாக கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் விடியற்காலை மற்றும் மாலை நேரங்களில் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெள்ளத்தின்போது குழந்தைகளிடையே பரவும் காய்ச்சல் வகைகள்

வெள்ளத்தின் போது, தண்ணீர் மாசு மற்றும் கொசு மற்றும் பூச்சிகள் கடிப்பதால் நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே குழந்தைகளை பாதிக்கக்கூடிய பொதுவான காய்ச்சல் வகைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

டைபாய்டு: அசுத்தமான உணவு அல்லது தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் பாக்டீரியா தொற்று, டைபாய்டு காய்ச்சல், பலவீனம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. உங்கள் குழந்தை அசுத்தமான நீர் மற்றும் உணவை சாப்பிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.பாக்டீரியா தொற்று: இந்த பாக்டீரியா தொற்று விலங்குகளின் சிறுநீரால் அசுத்தமான தண்ணீருடன் கலப்பதால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த தொற்றில் இருந்து தப்பிக்க குழந்தைகள் வெள்ள நீரில் விளையாடுவதையோ அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும்.

மலேரியா: மலேரியா என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், மேலும் வெள்ளத்தின் போது தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. காய்ச்சல், சளி, வியர்த்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். கொசுக் கடியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கொசுவலை மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

டெங்கு காய்ச்சல்: மழை காலத்தில் மிகவும் பொதுவாக பரவும் நோய்களில் டெங்கு காய்ச்சலும் ஒன்றாகும். இது ஏடிஸ் கொசுவால் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர், இது அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், உட்புற ரத்தப்போக்கு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். டெங்குவை தடுக்க உங்கள் குழந்தையை கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையின் போது டெங்கு காய்ச்சல்

வடகிழக்கு பருவமழை காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள், டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.டெங்குவின் அறிகுறிகள்: திடீர் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, மூட்டு வலி மற்றும் உடலில் அரிப்பு ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். கடுமையான சந்தர்ப்பங்களில், ரத்தப்போக்கு, சோர்வு போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு வராமல் தடுப்பது எப்படி:

இனப்பெருக்கத்தை தடுத்தல்: உங்கள் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க, பாத்திரங்கள், டயர்கள் மற்றும் தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைப்பதை தவிர்த்திடுங்கள்.கொசு வலைகள் மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்: கொசு வலைகள் கட்டி அதில் குழந்தைகளை தூங்கச் செய்யுங்கள். பகல் நேரங்களில் பூச்சியை விரட்டும் கிரீம்கள் அல்லது ஸ்ப்ரேகளைப் பயன்படுத்த வேண்டும்.

வீடுகளுக்கு கொசுவலை: கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலை அடியுங்கள்.பாதுகாப்பான ஆடைகள்: குறிப்பாக மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை மற்றும் பேன்ட் அணிவிப்பது, கொசுக் கடியிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும்.பொதுவாக வெள்ளத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குறிப்பாக குழந்தைகளுக்கு.

சுத்தமான தண்ணீரைக் குடிக்க வழங்குதல், நல்ல சுகாதாரத்தை கடைப்பிடித்தல் மற்றும் கொசுக் கடியிலிருந்து பாதுகாத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளத்தின்போது பரவும் டைபாய்டு, பாக்டீரியா மூலம் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் குறித்து பெற்றோர் விழிப்புணர்வுடன் இருந்தால் இந்த நோய்கள் வராமல் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியும்.

குறிப்பாக, வடகிழக்குப் பருவமழையின்போது டெங்கு காய்ச்சல் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் தண்ணீர் தேங்காமல் மற்றும் கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் டெங்கு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.பருவ மழை காலத்தில் விழிப்புடன் இருந்து நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

The post பருவமழை காலங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr ,Internal ,Purthi Arun ,
× RELATED கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்…