×

ரத்தசோகையை தவிர்ப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இந்திய அரசு நடத்திய தேசிய குடும்பநல ஆய்வு -5இன் தரவுகள்படி இந்தியர்களிடையே ரத்த சோகை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. உதாரணமாக, இந்தியாவில் 15-49 வயதுடைய ஆண்களில் சுமார் நான்கில் ஒருவருக்கும் அதே வயதுடைய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கும் ரத்த சோகை உள்ளது தெரியவந்துள்ளது. ஐந்து வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான குழந்தைகளுக்கு ரத்த சோகை உள்ளது.

ரத்த சோகை என்றால் என்ன?

ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. ஒருவேளை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் ரத்தத்துக்குக் குறையும். இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும்.

உலகம் முழுவதுமே ஆண்களை விடவும் பெண்களுக்கே ஒப்பீட்டளவில் அதிகமாக ரத்த சோகை உள்ளது. குறிப்பாக குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு ரத்த சோகை குறைபாடு அதிகம் என்கிறது ஆய்வு., மாதவிடாய், மகப்பேறு போன்றவை காரணமாக பெண்களுக்கு ரத்தம் வெளியேறும் காரணிகள் இயற்கையாகவே இருப்பதால் பெண்களிடையே ரத்த சோகை அதிகமாக இருக்கிறது.

உடலில் இரும்புச் சத்து பற்றாக்குறையால் பெரும்பாலும் ரத்த சோகை உண்டாகிறது. ஃபோலேட் (விட்டமின் – பி9), விட்டமின் – பி12, விட்டமின் – ஏ குறைபாடு ஆகியவையும் ரத்த சோகை உண்டாக முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. மேலும், மலேரியா, காசநோய், ஹெச்.ஐ.வி, ஒட்டுண்ணிகளால் உண்டாகும் நோய்கள், மரபணு ரீதியாக வரும் ஹீமோகுளோபின் நோய்கள் (haemoglobinopathies) ஆகியவையும் ரத்த சோகையை உண்டாக்கும்.

இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக நிலவும் வறுமையால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு, சமூக – பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் இருப்பவர்கள்கூட சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவு (balanced-diet) உட்கொள்ளாதது ஆகியவை ரத்த சோகை ஏற்பட வழிவகுக்கிறது அனைத்துஊட்டச்சத்துகளும் நிரம்பிய, குறிப்பாக இரும்புச்சத்து மிக்க, சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றினால் ரத்த சோகையைத் தவிர்க்க முடியும் ரத்தசோகைக்கு, நுண்-ஊட்டச்சத்துகள் (micro-nutrients) உணவில் சேர்க்கப்படுவது மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், விட்டமின்கள் மற்றும் தாதுக்களை மாத்திரை வடிவில் உட்கொள்வது ஆகியவற்றை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. நோய்க் கட்டுப்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாடு, மகப்பேறு சார்ந்த உடல்நலனைப் பராமரித்தல் ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கிறது.

இரும்புசத்து குறைபாடு..

உண்ணும் உணவில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாதபோது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து விடும். இது உடலை சோர்வடைய செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, ரத்த சோகைக்கு வழிவகுக்கும். உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ரத்த பரிசோதனை செய்யும் வரை பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக, மிகுந்த சோர்வு, கண்ணுக்கு கீழ் கருவளையம், மூச்சுத்திணறல், முடி உதிர்தல், வெளிர் தோல், கால்களில் ஒரு கூச்ச உணர்வு, தலைவலி, தலைச்சுற்றல், கை கால்களில் குளிர்ந்த உணர்வு, வேகமான இதயத்துடிப்பு, கவலை உணர்வு, நாக்கு, வாய் வீக்கம், எளிதாக உடையும் நகங்கள் ஆகிய அறிகுறிகள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.

இரும்புச்சத்து குறைபாட்டால் கடுமையான மறதி மற்றும் தூக்கத்தன்மை இருந்து கொண்டே இருக்கும். படிகளில் ஏறுவது சிரமமாக இருக்கும். மூச்சு திணறல் ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு தீவிரமான நிலைகளில் இதய தாக்குதல் வரை ஏற்படும்.

ரத்த சோகை வராமல் தடுக்கும் உணவுகள்..

கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி போன்ற விட்டமின் – சி போன்ற உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும்.

இரும்புச் சத்துக்காக நாம் உட்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து நாம் எதை உண்கிறோம் என்பது குறித்தும் அறிந்து வைத்திருப்பது முக்கியம்; ஏனெனில் சில உணவுகள் இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும், வேறு சில உணவுகள் தடுக்கும். அந்தவகையில், வயிறு நிறைந்திருக்கும்போது இரும்புச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதும் குறைவாகவே உறிஞ்சப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இரும்புச்சத்து தவிர ஃபோலிக் ஆசிட், ஜின்க், விட்டமின் – பி12 ஆகியவை நிறைந்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

The post ரத்தசோகையை தவிர்ப்போம்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Saffron ,Government of India ,Indians ,India ,
× RELATED கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்…