×

ஜோலார்பேட்டை அருகே ₹2 ஆயிரம் கடனை திரும்ப கேட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ரூ.2 ஆயிரம் கடனை திரும்ப கேட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திக்கொலை செய்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி- தேவகி தம்பதி. கடந்த 2014ம் ஆண்டு வெள்ளியங்கிரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். எனவே, தேவகி தனது 2 மகள்கள் மற்றும் மகன் கோட்டீஸ்வரனுடன் வசித்து வருகிறார்.

கோட்டீஸ்வரன்(24) கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, கடந்த 3 வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு, அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் தங்கம் மகன் மணிகண்டன்(20) என்பவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவசர தேவைக்காக ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த பணத்தை மணிகண்டன் திரும்ப கொடுக்காமல் இருந்ததால், கோட்டீஸ்வரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் பேசி பணத்தை கேட்டுள்ளார். அப்போது, மணிகண்டன் பணத்தை தரமுடியாது என கூறியதால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். பின்னர், கோட்டீஸ்வரன் தனது பெரியம்மா மகன் கிருபாகரன் என்பவரிடம் இதுகுறித்து கூறி ரூ.2 ஆயிரத்தை மணிகண்டனிடம் வாங்கி கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி கிருபாகரன் திருப்பத்தூர் அடுத்த மிட்டூருக்கு சென்று தீபாவளிக்காக பட்டாசு வாங்கிக்கொண்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல திருப்பத்தூர்- நாட்றம்பள்ளி சாலையில் புதுப்பேட்டை அருகே வரும்போது மணிகண்டன், அவரது நண்பர்கள் நவீன், டில்லிபாபு ஆகியோர் இருந்துள்ளனர்.

உடனே கிருபாகரன் தனது அண்ணன் கோட்டீஸ்வரனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். பின்னர், கிருபாகரன் அங்கிருந்து வீட்டிற்கு வந்து இதுகுறித்து கோட்டீஸ்வரனுக்கு நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 3 தினங்களுக்கு முன்பு கோட்டீஸ்வரன், கிருபாகரன் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்காக மூக்கனூர் சென்று, பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்ல வந்தபோது, அங்குள்ள பள்ளி அருகில் ஒன்றாக கூடியிருந்த மணிகண்டன், நவீன், டில்லிபாபு, வசந்த் ஆகியோர் கிருபாகரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதனை கோட்டீஸ்வரன் தடுத்துள்ளார். அப்போது, நீ யாருடா தடுக்க எனக்கூறி மணிகண்டன், டில்லிபாபு, நவீன், 17 வயது சிறுவன் ஆகியோர் கோட்டீஸ்வரனை சரமாரி தாக்கியுள்ளனர். அப்போது கிருபாகரனின் தாயார் தேவகி அங்கு சென்று தடுத்துள்ளார்.

அப்போது, மணிகண்டன் டில்லிபாபுவிடம் இவன் இருந்தா நமக்கு எப்போதும் பிரச்னை தான், போட்டு தள்ளுடா இவனை எனக்கூறினாராம். உடனே டில்லிபாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றிலும், மார்பிலும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் கோட்டீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். மேலும், அங்கிருந்த அவரது தாய் தேவகி, தம்பி கிருபாகரன் ஆகியோரை கத்தியை காட்டி உங்களையும் கொன்று விடுவோம் எனக்கூறி, கத்தியை அங்கேயே வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

பின்னர் படுகாயம் அடைந்த கோட்டீஸ்வரனை அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஆட்டோ மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து கோடீஸ்வரனின் தாய் தேவகி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து, பெரிய மூக்கனூர் பகுதியை சேர்ந்த தங்கம் மகன் மணிகண்டன்(20), அடியாத்தூர் வெங்கடேசன் மகன் டில்லிபாபு (20), பெரிய மூக்கனூர், பாறை வட்டம் சின்னராஜ் மகன் நவீன்(20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், ரூ.2 ஆயிரத்தை திருப்பி கேட்டதற்காக கோட்டீஸ்வரனை 3 பேர் பிடித்துக்கொண்டு ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்ததை வாக்குமூலமாக அளித்தனர். தொடர்ந்து, போலீசார் நேற்று இரவு 4 பேரையும் வேலூர் சிறையில் அடைத்தனர். இதில், கைதான சிறுவனை வேலூர் சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post ஜோலார்பேட்டை அருகே ₹2 ஆயிரம் கடனை திரும்ப கேட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Jolarbet ,Jolarbate ,Viliyangiri- Devaki ,Mukanur ,Jolarpet, Tirupathur District ,Dinakaran ,
× RELATED 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான...