×

புதுவை நகரப்பகுதியில் மாயமான மும்பை சிறுமிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது: சென்னை வாலிபர்களிடம் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் உறவினர் வீட்டுக்கு வந்த மும்பை சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து ஓட்டல் அறையில் அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் சென்னை வாலிபர்கள் 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்த மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 30ம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர் பெரியகடை காவல் நிலையத்தில் அன்று இரவு புகார் அளித்தார். அதன்பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அதிரடியாக விசாரணையில் ஈடுபட்ட போலீசார், மாயமான சிறுமி ஆட்டோவில் ஏறிச்செல்வதை கண்டுபிடித்தனர்.

அந்த ஆட்டோ டிரைவர் குறித்து விசாரித்தபோது, அவர் புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டாகுப்பத்தை சேர்ந்த மொய்தீன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து பெரியகடை போலீசார் மொய்தீனை பிடித்து, சிறுமியை ஏற்றிச் சென்றது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாப் கட்டிங் வைத்திருந்த சிறுமியை முதலில் ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது வீட்டுக்கு அழைத்து சென்று மனைவியிடம் சிறுவன் என அறிமுகம் செய்து வைத்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. மேலும் சிறுமிக்கு மது வாங்கிக்கொடுத்து 2 முறை வீட்டிலேயே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் போதையில் இருந்த சிறுமியை, மொய்தீன் புதுவை நகரப்பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் வாசலில் அன்றைய தினம் (30ம்தேதி) நள்ளிரவு இறக்கி விட்டுவிட்டு தப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து மொய்தீன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு புதுவை கடற்கரையில் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்து, நடுவழியில் இறக்கிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். மேலும், அதன்பிறகு அங்கிருந்த சென்னையை சேர்ந்த 3க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நைசாக சிறுமியிடம் பேச்சு கொடுத்து, அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக்கொடுத்து, கோட்டக்குப்பம் அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்து சென்றதும், பின்னர் அங்குள்ள ஓட்டல் அறையில் 31ம்தேதி அடைத்து வைத்து மதுபோதையில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் ஓட்டல் அறையை காலிசெய்து விட்டு, சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் கடந்த 2ம்தேதி ஓலா கார் மூலம் புதுவைக்கு சிறுமியை மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். சென்னை வாலிபர்கள் குறித்து தனக்கு தெரியாது, நேரில் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் அச்சிறுமி கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து சிறுமியை பாதுகாப்பான இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் தொடர் விசாரணையில் இறங்கிய போலீசார், சென்னைக்கு சென்று 3 வாலிபர்களை பிடித்து புதுவை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவை நகரப்பகுதியில் மாயமான மும்பை சிறுமிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது: சென்னை வாலிபர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Puduwai ,Chennai ,Puducherry ,
× RELATED தேர்தல் ஆணையம் புகார் இவிஎம் ஹேக்...