×

தீவிரவாதிகள் வெறியாட்டம் ஸ்ரீநகர் சந்தையில் குண்டு வீசி தாக்குதல்: 12 பேர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், பன்னடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயல்படும் சுற்றுலா வரவேற்பு மையம் அருகே, ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த ஞாயிறு சந்தை பகுதியில் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்கு பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க நம் ராணுவத்தினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகின்றனர். ஸ்ரீநகரில் கன்யார் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில், லஷ்கர் இ – தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூத்த தளபதி கொல்லப்பட்டார். இது, தீவிரவாதிகள் மத்தியில் கலக்கத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் நேற்று, ஸ்ரீநகரில் பன்னடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயல்படும் சுற்றுலா வரவேற்பு மையம் அமைந்துள்ள பகுதி அருகே, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ‘ஞாயிறு சந்தை’யில் சில தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த கையெறி குண்டை வீசிவிட்டு தப்பியோடினர்.

அந்த குண்டு குறி தப்பி, சாலையின் நடுவே விழுந்தது. அந்த குண்டு வெடித்து சிதறியதில் 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ‘தீவிரவாதிகள் வீசிய கையெறி குண்டு மக்கள் குழுமியிருந்த பகுதியில் விழுந்திருந்தால் அதிகளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். சாலையில் விழுந்ததால் பெரியளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது’ என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சந்தையை சுற்றியுள்ள தெருக்களில் ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனிடையே, ‘ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலால் பலர் காயமடைந்துள்ளது, மனதை உருக்குவதாக உள்ளது. அப்பாவிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ள கொலைவெறித் தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது’ என முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

‘தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் மீண்டும் அமைதி நிலவி, மக்கள் இயல்பு வாழ்க்கை நடத்த உதவ வேண்டும். தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கி, மக்களின் பயத்தை போக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளதால், அதன் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை ஒன்றிய அரசே கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post தீவிரவாதிகள் வெறியாட்டம் ஸ்ரீநகர் சந்தையில் குண்டு வீசி தாக்குதல்: 12 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Srinagar ,Jammu and ,Kashmir ,Pannaduku ,
× RELATED பென்சாக் சிலாட் போட்டியில் தமிழ்நாடு...