×
Saravana Stores

தீபாவளி பண்டிகை முடிந்ததும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: 2 நாட்களில் சவரனுக்கு ரூ.680 குறைந்தது

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்ததும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் 24ம் தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது. அதன் பிறகு கடந்த 21ம் தேதி ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து, தங்கம் விலை உயருவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளி அன்று ஒரு சவரன் ரூ.59,640 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. இது நகை வாங்குவோரை அதிர வைத்தது. தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.7,385க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,370க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,960க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post தீபாவளி பண்டிகை முடிந்ததும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: 2 நாட்களில் சவரனுக்கு ரூ.680 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Shavaran ,Chennai ,Diwali ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில்...