×

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன் தேர்வு

சென்னை: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு தலைவர்களாக இதுவரை தி.சு.அவினாசிலிங்கம், சி.சுப்பிரமணியம், வா.செ.குழந்தைசாமி, பொன்ன வைக்கோ ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் அண்மையில் ஆட்சிக்குழு, பொதுக்குழு கூடியது. இதில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய மொழிகளிலேயே தமிழுக்குத்தான் முதல் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கிய அமைப்பு தமிழ் வளர்ச்சிக் கழகம். உருவாக்கியவர் அப்போது சென்னை மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவினாசிலிங்கம். இவர்தான் தமிழ்வழிக் கல்வியை அறிமுகம் செய்தவர். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே 1946ல் தமிழ் வளர்ச்சிக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. விடுதலை அடைந்த ஆகஸ்ட் 15, 1947ம் நாள் கலைக்களஞ்சிய திட்டத்தை அறிவித்திருக்கிறது தமிழ் வளர்ச்சிக் கழகம்.

சிலப்பதிகாரத்திற்கு உரை தந்த- தமிழிசை இயக்கத்தை உருவாக்கிய – விடுதலைக்குப் பிறகு இந்திய அரசின் முதல் நிதி அமைச்சரான ஆர்.கே.சண்முகம் செட்டியார், சென்னை பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்த ஏ.எல்.லட்சுமணசாமி முதலியார், வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார், டி.கே.சிதம்பரநாத முதலியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியுடன் பெ.தூரனை பதிப்பாசிரியராக கொண்டு கலைக்களஞ்சிய திட்டம் அக்டோபர் 20, 1947ல் தொடங்கப்பட்டிருக்கிறது.

கலைக்களஞ்சியம் தயாரிப்பதற்கான அறிஞர் குழு அப்போதைய சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் மு.வ.ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ, டி.கே.சி. ஆகியோர் உறுப்பினர்களாகவும் கல்கியும் கே.சுவாமிநாதனும் செயலாளர்களாகவும் இருந்துள்ளனர். கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளும், குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளும், மருத்துவக் களஞ்சியம் 13 தொகுதிகளும், சித்தமருத்துவக் களஞ்சியம் 7 தொகுதிகளும், ஆங்கில மொழியாக்கம் 5 தொகுதிகளும், அறிவியல் தொழில் நுட்பக் களஞ்சியம் 5 தொகுதிகளும் மற்றும் குறுந்தகடுகளும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

The post தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Former ,-Chancellor ,Rasendran ,Tamil Development Corporation ,Chennai ,M.Rasendran ,T.S.Avinasilingam ,C.Subramaniam ,V.S.Kulandhasami ,Ponna Vaiko ,Dinakaran ,
× RELATED துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர்...