×

6 மாதங்களுக்கு பிறகு மணலி காமராஜ் சாலையில் மாநகர பேருந்து இயக்கம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், காமராஜ் சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மாநகர பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த சாலையில் மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால் பிராட்வேயில் இருந்து வரக்கூடிய மாநகர பேருந்துகள் மணலி மண்டல அலுவலகம் எதிரிலையும், பெரம்பூரில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியிலும் சாலை யோரம் நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்தில் பயணிக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே காமராஜர் சாலையில் மீண்டும் உடனடியாக மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் போக்குவரத்து துறை அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கருக்கும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அடுத்து மணலியில் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாநகர பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையேற்று மணலி நெடுஞ்செழியன் சாலையில் உள்ள பழைய மணலி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை கொடியசைத்து இயக்கி வைத்தார். முதற்கட்டமாக மணலியில் இருந்து திருவொற்றியூர் மார்க்கமாக பேருந்து இயக்கப்பட்டதாகவும் விரைவில் மணலியிலிருந்து மாத்தூர் வழியாக செல்லும் சாலைகள் சீரமைக்கும் பணி முடிந்ததும் விரைவில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து மண்டல மேலாளர் ஹேமச்சந்திரன், கிளை மேலாளர் லோகச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post 6 மாதங்களுக்கு பிறகு மணலி காமராஜ் சாலையில் மாநகர பேருந்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Manali Kamaraj Road ,Thiruvotiyur ,Kamraj Road ,Chennai Municipality ,Manali Zone ,Road Highway Department ,Municipal ,Dinakaran ,
× RELATED பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறி...