×

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காற்றின் மாசு அளவு சென்ற ஆண்டைவிட குறைவாகப் பதிவானதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தீபாவளி நாளான்று காற்றின் மாசு அளவு கடந்த ஆண்டைவிட குறைவாகப் பதிவானதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த வாரியம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது; தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் தீபாவளி தினத்திலிருந்து (அக்.31) 7 நாள்களுக்கு முன்பாகவும், 7 நாள்களுக்குப் பின்பாகவும் காற்று மாசு காரணிகளின் அளவுகளைக் கணக்கொடுப்பது வழக்கம்.

அதன்படி, சென்னையில் 7-இடங்கள், செங்கல்பட்டு, கடலூா், காஞ்சிபுரம், வேலூா், சேலம், திருப்பூா், கோவை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ஒசூா், தூத்துக்குடி, நாகா்கோவில் ஆகிய மாவட்டங்களில் தலா 2 இடங்கள் என மொத்தம் 39 இடங்களில் அக்.24 முதல் நவ.7 -ஆம் தேதி வரை காற்றுத்தர அளவு கண்காணிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.31-ஆம் தேதி காலை 6 முதல் நவ.1 காலை 6 மணி வரை மேற்கொண்ட ஆய்வில் காற்றுத்தர குறியீட்டு அளவு (ஏக்யூஐ) அதிகபட்சமாக சென்னை வளசராவாக்கத்தில் 287 -ஆகவும், குறைந்தபட்சமாக கடலூரில் 80-ஆகவும் பதிவானது.. இதில், சென்னையில் 4 இடங்களில் 200 ஏக்யூஐ-க்கு அதிகமாக பதிவானது குறிப்பிடத்தக்கது.

கோவை, சேலம், தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 150 முதல் 190 ஏக்யூஐ வரை பதிவாகினது. கடந்த ஆண்டு காற்றுத்தர குறியீட்டு அளவு அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 365-ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் காற்றின் மாசு அளவு நிகழாண்டு சற்று குறைந்துள்ளது. அக்.31-இல் ஒலி மாசு அளவு அதிகபட்சமாக ஒசூா் நகராட்சி அலுவலகத்தில் 91.5 டெசிபலும், திருச்சி மாவட்டம் தில்லை நகரில் 85.6 டெசிபலும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாகா்கோவில் ஸ்காட் கல்லூரியில் 57.3 டெசிபல் பதிவாகினது. அதேபோல் சென்னையில் ஒலி மாசு 59 முதல் 74 டெசிபல் வரை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காற்றின் மாசு அளவு சென்ற ஆண்டைவிட குறைவாகப் பதிவானதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pollution Control Board ,Diwali ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Pollution Control Board ,TMC ,Sapphil Diwali Day ,Air Pollution Control Board ,
× RELATED தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது