வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் பயிற்சி வகுப்பு

விளாத்திகுளம், அக். 24: விளாத்திகுளத்தில் வாக்குச்சாவடி நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம், அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை நடைபெற உள்ளது. நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இதையொட்டி விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிலைய அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர், மேற்பார்வையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில் வாக்காளர் பட்டியல் சரி செய்தல் தொடர்பாக படிவம் 6, படிவம் 7, படிவம் 8 பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் மலையாண்டி, எபிக் ஆபரேட்டர் பாரதி செல்வம் உள்பட 100க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: