இந்த நிலையில், பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பெரும் பின்னடைவாக அமைந்தது. முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னுக்கு சுருண்டதே இந்த தோல்விக்கு முக்கிய காரணம். கேப்டன் ரோகித் டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பாதகமாக முடிந்தது. 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோர் அடித்தும் அதை ஈடு செய்ய முடியவில்லை. நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.
பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தது குறிப்பிடத்தக்கது. எனினும், 2வது இன்னிங்சில் முன் வரிசை வீரர்கள் கணிசமாக ரன் குவித்து பார்முக்கு திரும்பியுள்ளனர். ரோகித் 52, கோஹ்லி 70 ரன் எடுத்த நிலையில், சர்பராஸ் கான் 150 ரன்னும், ரிஷப் பன்ட் 99 ரன்னுடன் விளாசியது கவுரவம் காக்க உதவியது. நியூசிலாந்து பவுலர்கள் அமர்க்களப்படுத்திய ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட் வேட்டை நடத்த முடியாததும் அணி நிர்வாகத்துக்கு தலைவலியை கொடுத்துள்ளது. புனே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரு அணிகளுமே புதிய வியூகம் வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இதற்கு முன் 2017ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2021, 2024ல் இங்கிலாந்துக்கு எதிராகவும் 0-1 என பின்தங்கிய இந்தியா, பின்னர் அதிலிருந்து மீண்டும் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த முறையும் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள்அதை சாதித்துக்காட்டுவார்களா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பிளேயிங் லெவனை சரியாகத் தேர்வு செய்வதில் தான் வெற்றி ரகசியம் அடங்கியுள்ளது. ஆல் ரவுண்டர்கள் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? 4 ஸ்பின்னர்கள் களமிறக்கப்படுவார்களா? சதம் விளாசிய சர்பராஸ் தனது இடத்தை தக்கவைப்பாரா அல்லது கே.எல்.ராகுலுக்காக தியாகம் செய்ய வேண்டியிருக்குமா?
என்ற கேள்விகளுக்கெல்லாம் இன்று காலை விடை கிடைத்துவிடும். அதே சமயம், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்வதுடன் தொடரையும் கைப்பற்ற வரிந்துகட்டுகிறது. பேட்டிங்கில் கான்வே, யங், ரச்சின், சவுத்தீ நல்ல பார்மில் உள்ளனர்.ஹென்றி, ஓ’ரூர்கே, அஜாஸ் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும். இரு அணிகளுமே வெற்றிக்குக் குறி வைத்து களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
* இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் 4 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது.
* நியூசிலாந்து வரிசையாக 4 தோல்விகளுக்குப் பிறகு பெங்களூருவில் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
* டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன் என்ற மைல்கல்லை எட்ட கே.எல்.ராகுலுக்கு இன்னும் 19 ரன் தேவை.
இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆகாஷ் தீப், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், சர்பராஸ் கான், விராத் கோஹ்லி, குதீப் யாதவ், முகமது சிராஜ், ரிஷப் பன்ட், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்.
நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில்லியம் ஓ’ரூர்கே, அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, வில் யங்.
The post நியூசிலாந்துடன் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்: பதிலடி கொடுக்குமா இந்தியா? புனேவில் பலப்பரீட்சை appeared first on Dinakaran.