ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரியதால் பாஜகவுடன் உமர் அப்துல்லா கூட்டு சேர்ந்துவிட்டாரா?… கூட்டணி கட்சியான காங்கிரஸ் விமர்சனம்


ஜம்மு: ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரியதால் பாஜகவுடன் உமர் அப்துல்லா கூட்டு சேர்ந்துவிட்டாரா? என்று கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு – காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லா, முதன் முதலாக நடந்த தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது; ஆனால் ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பது தொடர்பான முன்மொழிவு குறித்து மவுனம் காத்தது. இதற்காக பாஜகவுடன் உமர் அப்துல்லா கூட்டுச் சேர்ந்துள்ளதாக தேசிய மாநாட்டு கட்சியை எதிர்ப்பவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அடுத்த சில நாட்களில் டெல்லி செல்லும் உமர் அப்துல்லா, ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன்மொழிவு வரைவை பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்து மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்துவார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறின. இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா கூறுகையில், ‘ஜம்மு -காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீட்டெடுக்கும் வரை உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் சேரமாட்டோம்’ என்றார். இதற்கிடையில் பிடிபி கட்சியின் புல்வாமா தொகுதி எம்எல்ஏ வஹீத் பாரா வெளியிட்ட பதிவில், ‘உமர் அப்துல்லாவின் மாநில அந்தஸ்து பற்றிய முதல் முன்மொழிவானது, கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தின் முடிவுக்கு ஆதரவு நிலைபாடே தவிர வேறொன்றுமில்லை.

சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பது தொடர்பாக எந்த முன்மொழிவும் இல்லை. சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதாக கூறி அவர் மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். ஆனால் தற்போது அந்த நிலைபாட்டில் இருந்து விலகியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹண்ட்வாரா எம்எல்ஏ சஜ்ஜத் லோன் கூறுகையில், ‘ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன்மொழி தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக சட்டசபையில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த வகையில், மாநில அந்தஸ்து அல்லது சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுத்தல் போன்ற முக்கிய பிரச்னைகள் தொடர்பான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வருவதுதான் பொருத்தமாக இருக்கும். ஜம்மு – காஷ்மீர் மக்களின் விருப்பம் சட்டமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டும்; அமைச்சரவையில் அல்ல’ என்று கூறினார்.

The post ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரியதால் பாஜகவுடன் உமர் அப்துல்லா கூட்டு சேர்ந்துவிட்டாரா?… கூட்டணி கட்சியான காங்கிரஸ் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: