×

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, இனி 53 சதவீதமாக இருக்கும். அகவிலைப்படி என்பது அதிகரிக்கும் விலைவாசியை அரசு ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் அவர்களது சம்பளத்தை உயர்த்தி, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் நிதி நிவாரணம் வழங்குவதற்கான அரசின் முயற்சியாகும். இது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்படும்.

அதன்படி, தற்போது 3 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதத்தை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பெறுவார்கள். 7வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு மூலம் 49.18 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அரசுக்கு ரூ.9,448.35 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

இதே போல, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தை பருவத்தில் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடுகு குவிண்டாலுக்கு ரூ.300ம், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275ம் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு, கோதுமை, குங்குமப்பூ, பார்லி ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.210, ரூ.150, ரூ.140, பார்லி ரூ.130 உயர்த்தப்பட்டுள்ளது.

கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 2,425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ.2,275 ஆக இருந்தது. ரபி சந்தை சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது. மேலும், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா ரயில் நிலையம் இடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, ரூ.2,642 கோடி செலவில் கங்கை ஆற்றின் குறுக்கே ரயில்வே பாலம் மற்றும் கூடுதலாக 3வது மற்றும் 4வது ரயில் வழித்தடம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு நியாயமான விலையை வழங்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட பிஎம் ஆஷா திட்டத்திற்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிப்பு: அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Cabinet ,Delhi ,Union Cabinet ,Modi ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி...