×

தொடர் வெடிகுண்டு மிரட்டல் இந்திய விமானங்கள் குறி வைக்கப்படுகின்றனவா?: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 3 தினங்களாக இந்தியாவில் இருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு எக்ஸ் பதிவுகள் மூலம் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 19 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனால், பெரும்பாலான விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு வெடிகுண்டு சோதனைகள் நடந்தது. மேலும், விமானப்படை விமானங்ளின் பாதுகாப்புடன் சில விமானங்கள் பாதுகாப்பாக தரைஇறக்கப்பட்டன.

மேலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஏதாவதொரு நாட்டின் விமான நிலையத்தில் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு, அங்கு சோதனை நடத்தப்படுவதால் அங்கு பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அத்துடன் சில விமானங்கள் மீண்டும் புறப்பட்ட இடங்களுக்கே திருப்பி விடப்படுவதும், சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தாலும், இது விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களை குறி வைத்து விடப்பட்டுள்ள மிரட்டல்கள் பயணிகளை மட்டுமின்றி, ஒன்றிய பயணிகள் விமான போக்குவரத்துத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் சஞ்சய் ஜா தலைமையில் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கான நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளர் வும்லுன்மாங் வுவல்னம் கலந்து கொண்டார். அப்போது பேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளர் வும்லுன்மாங் வுவல்னம், “பல்வேறு இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

* 3 பேர் சிக்கினர்

கடந்த திங்கள்கிழமை மும்பையில் இருந்து சென்ற சர்வதேச விமானங்களுக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் காவல்பிரிவினர் நடத்திய விசாரணையில், சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்னந்த்கான் பகுதியை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ராஜ்னந்த்கன் விரைந்த மும்பை சைபர் கிரைம் காவல்பிரிவினர், 17 வயது சிறுவன், அந்த சிறுவனின் தந்தை மற்றும் அவர்கள் இருவரின் எக்ஸ் பதிவு மூலம் மிரட்டல் விடுத்த நபருக்கும் விசாரணைக்காக மும்பை வருமாறு சம்மன் கொடுத்துள்ளனர்.

The post தொடர் வெடிகுண்டு மிரட்டல் இந்திய விமானங்கள் குறி வைக்கப்படுகின்றனவா?: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian Airlines ,Union Govt ,New Delhi ,Department of Civil Aviation ,India ,Vaunadu ,Union government ,Dinakaran ,
× RELATED விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து...