புதுடெல்லி: ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் வகையில் அரிசியில் இரும்புச்சத்து, வைட்டமின், போலிக் அமிலம் போன்ற சத்துக்களைச் சேர்த்து, செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க முடியும் என ஒன்றிய அரசு கூறி வருகிறது.
இதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லாததால் பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், ஒன்றிய அரசின் நலத்திட்டங்களில் மார்ச் 2024க்குள் படிப்படியாக நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரியை விநியோகிக்க கடந்த 2022ல் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. இதில் 3 கட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் பிற நலத்திட்டங்கள் உள்பட்ட அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் 2024 ஜூலை மாதம் முதல் 2028 டிசம்பர் மாதம் வரையிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றிய அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் மூலம் ரூ.17,082 கோடி செலவிடப்படும் என ஒன்றிய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும். இதுதவிர, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.4,406 கோடி முதலீட்டில் 2,280 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The post நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க 17,082 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.