×

மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தம்

ராமநாதபுரம்,அக்.15:ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் துவங்கி விட்டதால், உப்பளம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு சுமார் 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ரூ.36 கோடிக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம், மாரியூர், மூக்கையூர், திருப்புல்லாணி, ஆனைகுடி, கீழகாஞ்சிரங்குடி, கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, பனைக்குளம், நரிப்பாலம், தேவிப்பட்டிணம் சம்பை, முத்துரெகுநாதபுரம் என மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உப்பு நிறுவனங்களின் உப்பு உற்பத்தி மற்றும் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் உப்பளங்களில் பழைய வடுகளை அகற்றுதல், வரப்பு மற்றும் பாத்தி கட்டுதல், உப்பு நீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட சீரமைப்பு, பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா கடலின் உப்புத்தண்ணீரில் உப்பு உற்பத்திக்கு தேவையான அடர்த்தி வெப்பநிலை இயற்கையாகவே கிடைக்கிறது. கடந்த மார்ச் மாதம் உப்பளத்திற்கு பாய்ச்சப்படும் கடல்நீரின் அடர்த்தி, வெப்பநிலை கிடைத்துள்ளதால் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் உப்பளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. உப்பள பாத்திகளில் உப்புநீர் பாய்ச்சப்பட்டு, உற்பத்திக்காக சேமித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல்,மே மாதத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் மாதம் கடைசி, ஜூலை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், இரண்டு மாதங்களாக மாவட்டம் முழுவதும் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.

அப்போது விளைவிக்கப்பட்ட உப்பு சேகரித்தல், உப்பை தரம் பிரித்து வாகனங்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பும் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் ஓராண்டு சீசனுக்கு 2 லட்சம் டன் முதல் 2.50 லட்சம் டன், 3 லட்சம் டன் என காலநிலைக்கு ஏற்ப உப்பு உற்பத்தியாகிறது. ஆனால் நடப்பாண்டு கோடை மழை, வெயிலின் தாக்கம் குறைவு போன்ற காரணங்களால் சுமார் 2 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் உப்பின் விலை ரூ.1800 முதல் 2,200 என தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு ரூ.36 கோடி மதிப்பிலான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை ஆகி வருவதாக தகவல் தெரிவிக்கிறது. அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை மழை மற்றும் பனிக்காலம் என்பதாலும், பிப்ரவரி மாதத்தில் உப்பளம் அமைத்தலுக்கான முன்னேற்பாடுகள் நடப்பதாலும் 6 மாதத்திற்கு உப்பு உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மீண்டும் வருகின்ற மார்ச் மாதம் முதல் உப்பளம் மற்றும் உப்பு உற்பத்தி, விற்பனை துவங்க உள்ளது.

The post மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Valinokkam Government Salt Company ,Mariyur ,Dinakaran ,
× RELATED கொட்டி தீர்த்த கன மழையால் சாலை,...