×

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ₹1 கோடி தங்கம், இ-சிகரெட், ஐபோன் பறிமுதல்: 4 பேர் கைது

மீனம்பாக்கம்: மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக பெருமளவில் தங்கம், இ-சிகரெட் மற்றும் ஐபோன்கள் கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியது. அதில், சென்னையை சேர்ந்த 4 பேர் குழுவாக மலேசியாவுக்கு சுற்றுலா பயணிகளாக சென்று திரும்பியிருப்பது தெரியவந்தது.

அவர்களின்மீது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் அவர்களின் உடைமைகளை பரிசோதித்தபோது, அதற்குள் தங்க நாணயங்கள், சங்கிலிகளை பதுக்கி கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், அவர்களின் உடைமைகளுக்குள் மறைத்து வைத்து 3,220 இ-சிகரெட்கள், ஐபோன்கள் போன்றவையும் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகளிடம் இருந்து ₹1.02 கோடி மதிப்பிலான 700 கிராம் தங்கம், 3,220 இ-சிகரெட்டுகள், ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இவர்கள் அனைவரும் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் 4 பேரையும் மேல் விசாரணைக்காக சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ₹1 கோடி தங்கம், இ-சிகரெட், ஐபோன் பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Central Revenue Intelligence Department ,Mundinam Chennai ,Malaysia ,Chennai Airport ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!