உடமைகளை பத்திரமாக எடுத்து செல்லுங்கள் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

 

திருச்சி, அக்.11: மக்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக எடுத்துசெல்ல திருச்சி கண்டோண்மென்ட் மகளிர் காவல்துறையினர் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வழக்கமாக வெளியூர்களில் வேலைக்கு செல்லும் மக்கள் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் சொந்த, பந்தங்களுடன் நேரம் செலவிட தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். மேலும் பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏற்றவாறு தமிழக அரசும் பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. இதேபோல் ரயில்வே துறை சார்பிலும் விடுமுறை தினங்களையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை தினத்திற்கு முந்தய தின இரவே அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர். அதனால் விடுமுறைக்கு முந்தைய தின இரவு ரயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். மத்திய மாவட்டமான திருச்சியில் எப்போதும் ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் நிறைந்தே காணப்படும்.
இந்நிலையில் விடுமுறைக்கு முந்தைய தினமான நேற்று திருச்சி ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மத்திய பேருந்து நிலையத்தில் கண்டோன்மெண்ட் காவல்துறை மகளிர் பிரிவு சார்பில் பொதுமக்கள் எவ்வாறு கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

The post உடமைகளை பத்திரமாக எடுத்து செல்லுங்கள் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: