×

போதையில் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை, அக். 11: மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள மதுக்கடை அருகே, கடந்த மாதம் 18ம் தேதி இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அபினேஷ் என்பவர், நண்பருடன் நின்றிருந்தார். இருவரையும் அங்கிருந்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் செல்ல மறுத்து, வாக்குவாதம் செய்தனர். அப்போது மதுபோதையில் இருந்த அபினேஷ், போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து அருகில் இருந்த தண்ணீரில் வீசினார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அபினேஷ் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், ‘மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை. பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றார். போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் ஜோசப் செல்வம், ‘மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த மனுதாரரை செல்லுமாறு அறிவுறுத்தியபோது அவர் மறுத்ததோடு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வாக்கிடாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்ததுள்ளார்’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அபினேஷுக்கு நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post போதையில் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,Klianur, Cuddalore district ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு...