- வட கிழக்கு
- பருவமழை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- ஜனாதிபதி பாலச்சந்திரன்
- சென்னை
- வடகிழக்கு
- வங்கக் கடல்
- ஜனாதிபதி
- பாலசந்திரன்
சென்னை: தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் விலகும் என்றும், அக்டோபர் 12ம் தேதி வங்கக் கடலில் உருவாகும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சிக்கு பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. சில இடங்களில் பெருத்த சேதங்களை உருவாக்கியுள்ள இந்த தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்துக்கான பருவமழை முன்னதாகவே தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்துக்கான தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை மகாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்னும் பெய்து வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரையில் படிப்படியாக தென் மேற்கு பருவமழை குறைந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் தென் மேற்கு பருவமழை முற்றிலும் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக நேற்று மாறியது. இது மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா-கோவா கடற்கரைப் பகுதிகளில் நீடித்து வருகிறது. அத்துடன் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும், நாளை (12ம் தேதி) வங்கக் கடலில் மத்திய பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம், மழை ஆகியவற்றின் தன்மையை வைத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்வது குறித்து அறிவிக்கப்படும்.
அத்துடன், திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 12, 13, 14ம் தேதிகளிலும் இதேநிலை நீடிக்கும். குறிப்பாக 13ம் தேதியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை மதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல 14ம் தேதியில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த இரு தேதிகளிலும் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த மழை ஒரு வாரத்துக்கு நீடிக்கும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
The post வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?: சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தகவல் appeared first on Dinakaran.