×

கொடைக்கானலில் நிலப்பிளவு ஏன்?: இந்திய புவியியல் ஆய்வு மையம் அறிக்கை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலையில் உள்ள கிளாவரை மலைக்கிராமம் வந்தரவு வனப்பகுதியில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் நிலப்பிளவு ஏற்பட்டது. இதுகுறித்து வருவாய் மற்றும் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து மாவட்ட கலெக்டருக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்தனர். தொடர்ந்து கடந்த செப். 25ல் புவியியல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குனர் சுந்தர்ராமன், வந்தரவு வனச்சரகர் பிரபு மற்றும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அடங்கிய குழு நேரில் ஆய்வு செய்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த இந்திய புவியியல் ஆய்வக விஞ்ஞானிகள் விவேக் சிங், குன்குளோ ஆகியோர் நிலப்பிளவு பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, நிலப்பிளவு எவ்வாறு ஏற்பட்டது, இதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய புவியியல் ஆய்வு மையம் தற்போது 11 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘வந்தரவு வனப்பகுதியில் 80 மீட்டர் நீளம் மற்றும் சுமார் 5 மீட்டர் முதல் 7 மீட்டர் ஆழத்திற்கு நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. இது நில அதிர்வு காரணமாக ஏற்படவில்லை. செருப்பன் ஓடை மற்றும் பரிகாசம் நீர்நிலை பகுதிகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் இந்த பகுதி நிலத்திற்குள் புகுந்ததால் நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதிக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும். நிலப்பிளவு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீரோ அல்லது வேறு தண்ணீரோ உட்புகாத வகையில் பாதுகாக்க வேண்டும். நிலவுப்பிளவு ஏற்பட்ட பகுதியில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கொடைக்கானலில் நிலப்பிளவு ஏன்?: இந்திய புவியியல் ஆய்வு மையம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Vandarau ,Klavari hill ,Kodaikanal Melamalaya, Dindigul district ,Revenue and Forest Department ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் நிலப்பிளவு ஏன்? இந்திய புவியியல் ஆய்வு மையம் அறிக்கை